ஆயுஷ்மன் பாரத் | உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, 23-செப்டம்பர் 2018 அன்று தொடங்கி வைத்தார்.
- ஆயுஷ்மன் பாரத் என்பது 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டை வழங்கும் ஒரு திட்டமாகும்.
- சமூகப் பொருளாதார நிலை மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் உரிமம் வழங்கப்படுகிறது.
- இந்த திட்டத்தை பற்றிக் கூடுதல் தகவல்கள் இந்திய அரசின் வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதை குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “சிலர் இந்த திட்டத்தை ‘மோடி கேர்’ என்றும் வேறு சிலர் ‘இது ஏழைகளுக்கான திட்டம’ என்றும் கூறுகின்றனர். இந்த திட்டம் ஏழைகளுக்கான சேவை திட்டம்.” என்று கூறினார்.
மேலும் அவர், “ஆயுஷ்மான் பாரத் திட்டம், அரசாங்க உதவியுடன் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் பயன்பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் ஒருங்கிணைந்த மக்கள் தொகையை விட அதிகமாகும். உலகின் பெரிய நிறுவனங்கள் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இந்திய அரசாங்கம் இந்த பெரிய அளவிலான திட்டத்தை எவ்வாறு நிதியுதவி செய்தது என்று ஆய்வு செய்வார்கள். இந்த திட்டத்திற்கான துரித தொலைபேசி எண் 14555. இதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.” என்று கூறினார்.
சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் இதை பற்றி கூறுகையில், “தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடத்திய 71 வது சுற்றுக் கணக்கெடுப்பின்படி, சுமார் 85.9 சதவிகித கிராமப்புற குடும்பங்கள் மற்றும் 82 சதவிகித நகர்ப்புற குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லை. 18 சதவிகித நகர்ப்புற குடும்பங்கள் மற்றும் 24 சதவிகிதத்திற்கும் மேலான கிராமப்புற குடும்பங்களில் கடன் பெற்று தான் மருத்துவ செலவுகள் செய்துள்ளனர். இந்த நிலையை ஆயுஷ்மான் பாரத் திட்டம் மாற்றி அமைக்கும்.” என்று கூறினர்.
யார் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்?
- சமூகப் பொருளாதார நிலை மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் சலுகைகள் வழங்கப்படுகிறது.
- இந்த திட்டத்தில் குடும்ப அளவு மற்றும் வயதில் எந்த வரையறையும் இல்லை.
- இந்த திட்டத்திலன் கீழ் பயன் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. தேர்தல் அட்டை மற்றும் ரேஷன் அட்டை பயன்படுத்தியும் இந்த திட்டத்தில் உள்ள சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
- இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் இந்த திட்டத்தில் பதிவு செய்து கொண்டவர்கள் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
- இந்த திட்டத்தில் பதிவு செய்யும் அனைவருக்கும் QR குறியீடுகள் உள்ள ஒரு கடிதம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கான தகுதியை சரிபார்க்க இந்த கடிதம் பயன்படுத்தப்படும்.