துன்மார்க்கர்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் இருபத்தியெட்டு மூன்றிலே அயலானுக்கு சமாதான வாழ்த்துதலை சொல்லியும் தங்கள் இருதயங்களில் பொல்லாத சிந்தனைகளை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் அடியேனை வாரிக்கொள்ளாதேயும்.
துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரனோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும். அப்படிப்பட்ட ஒரு முடிவு எனக்கு வராமல் என்னை காத்துக்கொள்வீராக. அவர்கள் எல்லாரும் வாயிலே உதட்டளவிலே வாழ்த்துதல் சொல்கிறார்கள், சமாதானம் பேசுகிறார்கள். ஆனால் இருதயத்திலோ பொல்லாத சிந்தனைகள் வைத்திருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு விரோதமாக தீய காரியங்களை செய்வதற்காக அவைகள் எல்லாவற்றையும் தங்களுடைய இருதயங்களிலே மறைத்து வைத்திருக்கிறார்கள். உதடுகள்தான் பேசுகிறது. நயவசனிப்பாக பேசுகிறது. அப்படிப்பட்ட மக்களின் மத்தியில்தான் நான் இருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு வரக்கூடிய அழிவோ சங்காரமோ எனக்கு நேரிட்டுவிடக் கூடாது. என்னை அவர்களோடு கூட என்னை வாரிக்கொள்ளாதேயும்.
எனக்கு இரக்கம் பாராட்டும். உம்முடைய கண்களிலே தயைக் கிடைக்கட்டும். கர்த்தாவே! இருதயத்திலே சுத்தம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று நீர் சொன்னீரே. சுத்த இருதயத்தோடும் தூயக் கரங்களோடும் எங்களை தாழ்த்தி அற்பணிக்கிறோம். உம்முடைய கிருபைக்காக கெஞ்சி நிற்கிறோம். அடியேனை உம்முடைய சட்டைக்கு கீழாக வைத்து கொள்ளும். உம்முடைய தயவுள்ள கரம் எம்மை பாதுகாக்கட்டும், பராமரிக்கட்டும். இரட்சித்துக் கொள்ளட்டும்.
கர்த்தாவே! இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் நீர் அருள் செய்வீராக. இந்த உலகம் பொல்லாங்கிற்குள்ளாக கிடக்கிறது. கேடுபாடுகள் செய்கிற மக்கள் மத்தியிலே நாங்கள் வாழ வேண்டியதாய் இருக்கிறது. அவர்களை போன்று எங்களுக்கும் ஒரு அழிவு வராதபடி எங்களை காத்துக்கொள்ளும். உம்முடைய கிருபையுள்ள கரம் எங்களை தடுத்து ஆட்கொள்ளட்டும். நீரே எங்களுக்கு இரட்சகராக மேய்ப்பராக இருந்து எங்களை காத்து கொள்வீராக. இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளையும் ஆசிர்வதித்து காத்துகொள்வீராக. ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்