தீர்க்க ஆயுசு
இந்த நாளில் தரி ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். இந்த ஜெபத்தை எஸ்ராவின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில் இருந்து நாம் பார்க்கிறோம். பரலோகத்தின் தேவனுக்கு சர்வாங்க தகனப்பலிகளை இட தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், எண்ணெய், உப்பு போன்றவற்றை தினந்தோறும் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது. ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்க ஆயுசு உண்டாக மன்றாடும்படிக்கு இப்படி செய்யப்படக்கடவது.
எரிசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்தை கெடுக்கவும் தங்கள் கையை நீட்ட போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணினவருமான தேவன் நிருமலமாக்கக்கடவன். இவ்விதமாக தரி ராஜா இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். கோரேசு ராஜாவின் நாட்களில் எரிசலேமில் தேவாலயத்தை கட்டுவதற்காக எஸ்ராவின் தலைமையிலே யூதர்கள் ஒன்று கூடி எரிசலேமுக்கு நேராக புறப்பட்டு செல்கிறார்கள். ராஜாவினுடைய விருப்பப்படியும் தாங்கள் எழுபது வருஷ காலமாக எதிர்ப்பார்த்து இருந்த வாஞ்சையின்படியும் அவர்கள் யூதா தேசத்திற்கு திரும்பிச்சென்று தேவாலயத்தை கட்டுவதற்காக ஆயத்தப்படுகின்றார்கள். ஆனபொழுதிலும் அங்கே இருக்கிறதான ஜனங்களை சம்பலாத், தொபியா, கேசு போன்றதான அந்த பகுதியிலே வாழ்ந்து வந்ததான அன்னிய மக்கள் இந்த எரிசலேமிலே தேவாலயத்தை கட்டுகிறதை குறித்து பரிகாசம் பண்ணி அவர்களை துக்கப்படுத்தி விசாரப்படுத்தி பேசுகின்றார்கள். பல மொட்டை கடிதாசிகளும் எழுதுகின்றார்கள். ஆனால் அவைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து தரி ராஜா இந்த எரிசலேமில் தேவாலயத்தை கட்ட வேண்டும். ராஜாக்களுக்காக பலியிட வேண்டும்.
ராஜாக்களும் அவர்களுடைய குமாரர்களும் நீடித்து இருக்கும்படியாக அவர்கள் ஜெபம் பண்ணுவார்கள். அந்த தேவாலயத்துக்கு எதிராக கிரியை செய்கிற ராஜாக்களோ அல்லது மக்களோ அவர்களை ஆண்டவர் தண்டிப்பாராக என்று சொல்லி ஜெபிக்கிறான். கர்த்தருடைய பணிக்கு எதிராக செயல்படக்கூடிய எந்தவொரு சக்தியையும் வல்லமையுள்ள தேவன் சந்திப்பார். தடைகளை அகற்றிப் போடுவார். மன உற்சாகத்தோடு வாஞ்சையோடு செய்கிற மக்களுடைய கிரியைகளை அங்கீகரிப்பார்.
இரக்கமுள்ள ஆண்டவரே! இவ்வேளைக்காக நாங்கள் உம்மை ஸ்த்தோத்திரிக்கிறோம். தரி ராஜாவை போன்று நாங்களும் உம்முடைய நாம மகிமைக்காக செயல்பட உற்சாகம் கொள்ள உதவி செய்வீராக. இவ்விதமாக உம்முடைய தேவாலய பணிகளிலே ஈடுபடுகிற மக்களுக்கென்று உதவிகளை கட்டளையிடும். பாதுகாப்பை தந்தருளும். தடைகளை எடுத்துபோடும். கிருபையினால் தாங்கும் ஏசு கிறிஸ்துமூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்