சிலுவையின் வார்த்தை 07:03 | பிதாவே என் ஆவியை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன்.

2. மோசே.

உபாகமம் 34:1 பின்பு மோசே மொபைபின் சமனான வெளியிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியிலே ஏறினான்;

வ.5 அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மறித்தான்.

வ.6 அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார்; இந்நாள் வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.

யூதா 5:9 மிகாவேல் மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்; கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்றான்.

மனிதனாய்ப் பிறந்தவர்கள் எல்லாரும் கர்த்தர் நமக்கு நிர்ணயித்த நாளிலே நாம் மரணத்தைச் சந்திப்போம். மரணம் வராமல் சதாகாலமும் ஒரு மனிதன் பூமியில் வாழ முடியாது. அதே போன்று தன் சரீரத்தில் இருந்த ஆவியை யாரும் வைத்துக்கொள்ள முடியாது. அதேபோன்று நாம் எங்கே சாகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படிப்பட்ட சாவு நமக்கு ஏற்பட்டது என்பதுதான் முக்கியம். நம்முடைய உயிர் என்னவிதமாய்ப் போயிற்று என்பது முக்கியமல்ல. நாம் நம்முடைய சாவை யாரிடத்தில் ஒப்படைத்தோம் என்பதுதான் முக்கியம். நமக்குள் வாசம் பண்ணின ஆவியை யாரிடத்தில் ஒப்படைத்தோம் என்பது முக்கியமாகும்.

கர்த்தருடைய அழைப்பை ஏற்ற நாள் முதல் மோசே ஆண்டவருடைய ஊழியத்தை உண்மையாய் செய்கிறான். அவனுடைய ஊழியம் நிறைவடைகிற பொழுது கர்த்தர் அவனுடைய மரணத்தை முன் குறிக்கிறார். எரிகோவுக்கு எதிராய் யோர்தானுக்கு கிழக்கேயிருக்கிற நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் மரித்தான். மோசேயின் மண்ணான சரீரம் செத்தது. அவனுக்குள்ளிருந்த ஆவி தேவனிடத்தில் போயிற்று. மோவாப் தேசத்தில் பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேயின் சரீரத்தை அடக்கம் பண்ணினார். இது மோசேக்கு கிடைத்த பெரும்பாக்கியம். ஆனால் சத்துருவாகிய பிசாசானவன் மோசேயின் சரீரத்தைக் குறித்து தர்க்கித்துப் பேசுகின்றான். மோசேயின் சரீரத்தைப் பற்றியும் அவனுடைய மரணத்தைப் பற்றியும், மோசே அடக்கம் பண்ணப்பட்ட இடத்தைப் பற்றியும் பிசாசானவன் மிகாவேலோடு தர்க்கித்துப் பேசுகின்றான். மிகாவேல் அதற்குப் பதிலாக கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்றான். நம்முடைய காலங்களெல்லாம் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது.

சங். 23:4-ல் தாவீது கூறுகிறார்: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்”. தேற்றரவாளனாகிய கர்த்தர் நம்மோடிருக்கிறார். நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் கர்த்தர் பொறுப்பேற்றுக் கொள்வார். எனவே நம்முடைய மண்ணான சரீரம் செத்துப் போனபின் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம்முடைய சரீரத்திலிருந்த ஆவியும் தன்னைத் தந்த தேவனிடம் போய்விடும். இதைப் பற்றி விளக்கம் கூறுவதற்கு வேறு எந்த சாட்சிகளும் தேவையில்லை.

தொடரும்…

புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை, via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com