சிலுவையின் வார்த்தை 05:04 | தாகமாயிருக்கிறேன்.

4. ஏரோதுவே உன் பேரில் தாகமாயிருக்கிறேன்.

லூக்கா 23:8,9 ஏரோது இயேசுவை குறித்து அநேக காரியங்களை கேள்விப்பட்டிருந்திருந்தாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும் அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசை கொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டு, வ.9 அநேக காரியங்களைக் குறித்து அவரிடத்தில் வினவினான். அவர் மறுமொழியாக ஒன்றும் சொல்லவில்லை.

இயேசு ஏரோதுவின் பேரில் எவ்வளவு தாகமாயிருக்கிறார் என்பது தெளிவாகிறது. அரண்மனையிலே கூடி வந்திருக்கிற ஜனங்களெல்லாரும் ஏரோதுவை மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயேசுவினடத்தில் அநேக கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறான். ஏரோது கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கு கூட இயேசு பதில் கொடுக்கவில்லை. ஆனால் ஏரோது இயேசுவின் மேல் கோபப்படவில்லையே ஏன்? ஜனங்களுக்கு முன்பாகவும் ஏசுவுக்கு முன்பாகவும் ஏரோதுவாகிய தான் ஒரு பொறுமைசாலி என்றும், கோபங்கொள்ளாதவன் என்று பிறருக்கு காட்டிக்கொள்வதற்காக அவன் எதிர் பேசவுமில்லை கோபப்படவுமில்லை.

இயேசு ஏன் ஏரோதுக்கு பதில் சொல்லவில்லை? ஏரோது ஒரு எரிமலை. நெருப்பைப் பிழம்புகளை தனக்குள்ளே வைத்திருக்கிறவன் என்று இயேசு அறிவார். ஏரோது தன் சகோதரனுடைய மனைவியை வைத்துக் கொண்டிருப்பதை யோவான் ஸ்நானகன் கண்டித்தான். எனவே ஏரோது யோவான் ஸ்நானகனை சிறையில் போட்டான். தன்னுடைய ஜென்ம நாளிலே அரசவையில் ஏரோதியாள் தன் மகளை நடனம் ஆடச் சொல்லி யோவான் ஸ்நானகனின் தலையைப் பரிசாக கேட்டாள். ஏரோதும் யோவான் ஸ்நானகனை கொன்று அவன் தலையை கொண்டு வரச்சொன்னான். இதையெல்லாம் இயேசு அறிவார். ஆனால் ஏரோதுவோ இப்பொழுது ஏசுவுக்கு முன் நல்லவன் போன்று காட்டிக்கொள்கிறான். கர்த்தருடைய ஊழியக்காரனைக் கொன்றதற்காக ஏரோது யேசுவிடம் மன்னிப்பு கேட்கவில்லை. என் பாவக் கறைகள் நீங்க என்ன வழி என்று ஏரோது யேசுவிடம் கேட்கவில்லை. கொலை பாதகத்தினால் அமைதியற்ற நிலையில் வாழ்கிற எனக்கு ஒரு அமைதியான வழியைக் காட்டும் என்று ஏரோது யேசுவிடம் கேட்கவில்லை. ஏரோது தனக்கு ஒரு புது வாழ்வு வேண்டும் என்று கேட்டிருந்தால் இயேசு கொடுத்திருப்பார். இயேசுவின் தாகம் தீர்ந்திருக்கும். ஆனால் யேசுவோ பதில் ஒன்றும் சொல்லவில்லை. எனவே இயேசு தாகமாயிருக்கிறேன் என்கிறார்.

கொல்கொதா மலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறதை அநேகர் பார்த்தார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே இவர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். மக்கள் கூட்டம் ஆட்சியாளர்களைத் திருப்தி படுத்துகிறவர்களாக காணப்படுகிறார்கள். மனந்திரும்பாத மக்கள் கூட்டத்தைப் பார்த்து இயேசு தாக்கமாயிருக்கிறேன் என்றார். பிலாத்து யேசுவிடம் நீர் சொல்லுகிற சத்யமாவது என்ன என்று கேட்டான். ஆனால் இயேசு பதில் சொல்லும் வரை அவன் காத்திருக்கவில்லை. தண்ணீரை அள்ளி கையை கழுவி விடுகிறான். இவனை குறித்தே இயேசு தாகமாயிருக்கிறேன் என்கிறார். அதே போன்று நீங்களும் நானும் சீர்கெட்டப் பிள்ளைகளாக வாழ்ந்து மனதில் மனஸ்தாபம் இல்லாமலும் யேசுவிடம் பாவத்தை அறிக்கை செய்யாமலும் இருந்தால் நம்மை பார்த்தும் தாக்கமாயிருக்கிறேன் என்பார்.

தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.

படம்: By Geralt [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com