சிலுவையின் வார்த்தை 03:06 | ஸ்திரீயே, அதோ, உன் மகன்.

6. இயேசு தான் அன்புகூர்ந்த யோவானுக்கு கொடுத்த பொறுப்பு

யோவான் 19:25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதிரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்று கொண்டிருந்தார்கள்.

வ.27 பின்பு சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.

மத்தேயு 4:21 அவர் அவ்விடம் விட்டு போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டு அவர்களையும் அழைத்தார்.

வ.22 உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு அவருக்கு பின் சென்றார்கள்.

மத்தேயு 17:1 இயேசு பேதுருவையும், யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய் (வ.2) அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.

லூக்கா 22:7 பஸ்காவை பலியிட வேண்டிய புளிப்பில்லா அப்பப்பண்டிகை நாள் வந்தது. வ.8 அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய் அதை நமக்கு ஆயத்தப்படுத்துங்கள் என்றார்.

யோவான் 13:23 அந்த சமயத்தில் அவருடைய சீஷரில் ஏசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்தான்.

மத்தேயு 26:36 அப்பொழுது இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து… வ.37 பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டு போய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

செபதேயுவின் குமாரர்களான யாக்கோபும் யோவானும் தங்கள் தகப்பனுடன் கடலில் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் படகில் உட்கார்ந்தபடி தங்கள் வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு யாக்கோபையும், யோவானையும் தனக்கு சீஷர்களாக இருக்க அழைத்தார். அவர்கள் தங்கள் தகப்பனையும் படகையும் விட்டு யேசுவுடன் சென்றார்கள். இயேசு தனித்து ஜெபிக்கும்படி உயர்ந்த மலைக்குச் செல்லும் பொழுது பேதுருவையும், யாக்கோபையும் யோவானையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். இயேசு மறுரூபமடைந்த காட்சியை கண்டார்கள். மோசேயும், எலியாவும் யேசுவோடு பேசிக்கொண்டிருக்கும் காட்சியை கண்டவர்களில் யோவானும் ஒருவன்.

இயேசு சீஷர்களுடன் பஸ்காவை புசிக்க விரும்பி அதை ஆயத்தப்படுத்தும் பணிக்காக பேதுருவையும் யோவானையும் அனுப்புகிறார். இயேசு சொல்லியபடி எருசலேமில் மேல் வீட்டில் பஸ்காவை பேதுருவும் யோவானும் ஆயத்தப்படுத்தினார்கள். பஸ்காவை புசிக்கும் வேளையில் ஏசுவுக்கு அன்பாயிருந்த சீஷனாகிய யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்தான். ஒரு குழந்தை தகப்பன் மடியில் உட்கார்ந்து இருப்பதைப்போல யோவான் இயேசுவின் மார்பில் செல்லப் பிள்ளையாய் சாய்ந்து கொண்டிருந்தான்.

பஸ்காவை புசித்து மகிழ்ந்து ஸ்தோத்திரப்பாட்டை பாடினார்கள். அதன் பின்னர் இயேசு தன்னை இந்த பூமிக்கு அனுப்பின பிதாவின் மேலான திட்டத்தை நிறைவேற்றவும் அவரோடு தனித்து ஜெபிக்கவும் கெத்சமனே தோட்டத்திற்கு செல்ல விரும்பினார். தன்னோடிருக்கவும் தனக்காக வியாகுலப்படவும் இயேசு பேதுருவையும், யாக்கோபுவையும் யோவானையும் தனியே அழைத்து சென்றார். ஒரு மணி நேரமாவது விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் என்று சீஷர்களிடம் சொல்லிவிட்டு சற்று தனியே சென்று இயேசு ஜெபித்தார். இவ்விதமாக இயேசு தான் செய்த ஊழியங்கள் எல்லாவற்றிலும் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பேதுருவே, நீ கற்பாறையாயிருக்கிறாய். உன்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் என்றார். ஆனால் இயேசு, யோவானை அழைத்து: சீஷனே, அதோ உன் தாய் என்று மரியாளைக் கவனிக்கும் பொறுப்பை யோவானுக்கு கொடுக்கிறார். தன்னை பெற்றெடுத்த தாய்க்கு அவளுடைய அந்திம நாட்களில் தான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் தனக்கு அன்பான சீஷனிடத்தில் ஒப்படைக்கிறார். இது யோவானுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.

தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.

படம்: By Didgeman [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com