கேரளாவில் பெருவெள்ளம்! காரணம் என்ன?
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென் மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. கேரளாவில் கிட்டத்தட்ட அனைத்து அணைகளும் இந்த பெருமழையினால் நிறைந்து விட்டன. இந்த நிலையில், 25 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்படுகின்றன. எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், ஆலப்புழா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பெரும் மழை பெய்ததால் வெள்ளத்தால் மக்கள் தவிக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆசியாவின் மிகவும் உயர்ந்த அணைகளில் ஒன்றான இடுக்கி ஆணை, கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக, இந்த அணையிலுள்ள அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய பருவநிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க முடியாததும், நிலச்சரிவு ஏற்பட்டும் பகுதி என்று தெரிந்திருந்தும் கட்டடங்கள் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டதும், அணைகளை சரிவர பராமரிக்காமல் தவறவிட்டதும் காரணங்கள் என கூறப்படுகிறது. காரணங்கள் பல இருக்க, கடுமையான காலநிலை மாற்றங்கள், அதீத வறட்சி, மிகப்பெரிய மழை மற்றும் சூறாவளிகள், இந்திய துணைக்கண்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் இந்த காலநிலை மாற்றங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.