காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது!
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக காவிரி நீரை அளவிடுதல், அணைகள் பராமரிப்பு, காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படவுள்ள தண்ணீரில் அளவு உட்பட பல்வேறு பிரச்சனைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்தையும் ஒழுங்காற்று குழுவையும் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்த இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு அண்மையில் அமைத்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக திரு.மசூத் உசைன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் பொதுபணித்துறை செயலாளர் திரு.பிரபாகர், திருச்சி மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் திரு.செந்தில் குமார் ஆகியோர் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மற்றும் கேரள மாநில அரசுகளும் தங்கள் மாநில பிரதிநிதிகளை நியமித்துள்ளன. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்பு, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று கர்நாடகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது.
இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ் நாடு அரசின் சார்பில் விவாதிக்க வேண்டிய கருத்துக்கள் குறித்து ஜூன் மாதம் 29ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள மத்திய நீர் வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையதின் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், ஆணையத்தின் தமிழக உறுப்பினர்கள் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி 177.25 tmc நீரை திறந்து விடுமாறு வலியுறுத்த வேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்ற நிலை உள்ளதால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்பையே அவமதிப்பதாகும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.