இலங்கையில் 2019 ஜனவரி 5ம் தேதி பொது தேர்தல்!
இலங்கையில் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா அதிரடியாக கலைத்ததையடுத்து அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைப்பால் குழப்பமான சூழல் நிலவும் இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அதிபர் சிறிசேனவிற்கு அதிகாரம் இல்லை என இலங்கை சட்டவல்லுனர்கள் தெரிவித்திருப்பது மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இலங்கை அதிபராக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நியமிக்கப்பட்ட திரு.ராஜபக்சே தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா நேற்றிரவு கலைத்தார். இந்த நடவடிக்கையை குறித்து அவர், இலங்கை அதிபர் என்ற முறையில் தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக கூறினார். இதையடுத்து அதிபர் சிறிசேனவிற்கு இலங்கை அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிபர் சிறிசேனா இலங்கையில் ஜனவரி 5ம் தேதி பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் நவம்பர் 19ம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார். நிலையான ஆட்சி அமையும் என எதிர்பார்த்த மக்களிடம் தற்போது குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்கு எதிரான இலங்கை அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசியல் காட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இலங்கை வாழ் தமிழர் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பது ஜனநாயக படுகொலை என்று திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர், மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை இலங்கை மக்களுக்கு உருவாக்கி இலங்கை தமிழர் நலனுக்கு அதிபர் சிறிசேனா அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார். நாடாளுமன்றத்தை கலைத்து இலங்கை தமிழர்கள் முதுகில் குத்திவிட்டு, இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவுக்கு முழு அதிகாரத்தையும் கொடுக்க சதி நாடகத்தை அதிபர் சிறிசேனா அரங்கேற்றிவிட்டார் என மதிமுக தலைவர் திரு.வைகோ கூறியுள்ளார். 2020ம் ஆண்டு ஆகஸ்ட் வரை பதவியில் இருப்பதற்கு தற்போதய அரசிற்கு முழு அதிகாரம் இருந்தும் இலங்கை நாடாளுமன்றம் ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்று பாமக தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இலங்கை சட்டவல்லுனர்கள் கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி நீக்கம், மஹிந்த ராஜபக்சே பதவி நியமனம், இறுதியாக ராஜபக்சேவினால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததினால் பாராளுமன்றம் கலைப்பு – இந்த மூன்று நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு புறம்பானது” என கூறுகின்றனர்.