ஆவி

இந்த நாளில் யோசேபாத் ராஜாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். இரண்டு நாலாகமம் இருபதாம் அதிகாரம் இருபதாவது வசனத்திலே யூதாவே எரிசலேமின் குடிகளே கேளுங்கள், “உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள். அவர்களுடைய தீர்க்கத்தரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்தி பெறுவீர்கள்” என்று யோசேபாத் ராஜா ஜெபிக்கிறார். வெள்ளத்தினாலும் அல்ல,

பராக்கிரமத்தினாலும் அல்ல என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று சொல்லி கர்த்தராகிய ஆண்டவர் நமக்கு சொல்லி இருக்கிறார். நாம் மாம்சிக பலத்தோடுகூட எந்தவொரு காரியத்தையும் செய்ய துணிந்து செல்லக்கூடாது. பணபலம் ஜனங்களுடைய எண்ணிக்கையின் பலம் அல்லது அநேக உதவியாட்களுடைய ஒத்தாசையினுடைய பலன் நமக்கு காரியத்திற்கு உதவாது. ஆண்டவருடைய சத்தத்தை நாம் கேட்க வேண்டும். அவருடைய வல்லமையான மகத்துவமான கிரியைகளை நாம் நம்ப வேண்டும். தீர்க்கத்தரிசிகளை நாம் நம்ப வேண்டும்.

கர்த்தர் தீர்க்கதரிசிகள் மூலமாக சொல்லுகிற வார்த்தைகளை நாம் நம்ப வேண்டும். ஆகவே கர்த்தர் பேரில் நாம் பற்றுதலாக இருந்தால் நம்பிக்கையாக இருந்தால் அவர் நம்முடைய வாழ்க்கையிலே அற்புதங்களை செய்வார். அடையாளங்களை செய்வார். ஆசிர்வதிப்பார். எல்லா தவறுகளையும் சஞ்சலங்களையும் போராட்டங்களையும் மாற்றிப் போடுவார். அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து அவர் நம்மை ஆசிர்வதிப்பார்.

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். இஸ்ரவேலை காக்கிற தேவன் உறங்குகிறதும் இல்லை, தூங்குகிறதும் இல்லை. பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிழலாகிலும் உம்மை சேதப்படுத்துவதில்லை என்று சொன்ன கர்த்தரை நாம் நம்ப வேண்டும் விசுவாசிக்க வேண்டும் அவரை நோக்கி நாம் ஜெபிக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் நமக்கு உதவி செய்வார். கீதாவின் மக்களும் ராஜாவும் கர்த்தரை நம்பினார்கள், விசுவாசித்தார்கள், கிருபைப் பெற்று கொண்டார்கள். நாமும் அதை போன்று கர்த்தரை நோக்கிப்பார்ப்போம். அவருடைய மகத்துவமான கிரியைகளை அவருடைய கரத்திலே இருந்து பெற்றுக்கொள்ள நாம் தாழ்மையாக காத்திருப்போம்.

இரக்கமுள்ள ஆண்டவரே! எங்களுடைய மனதின் பாரங்களை உம்முடைய சமூகத்திலே நாங்கள் இறக்குகிறோம். நீர் ஜெபத்தை கேட்கிறவர். எம்முடைய இதயத்தின் துக்கத்தை அறிகிறவர் எம்முடைய வேதனைகளை நீக்கி போட உம்மால் மட்டுமே ஆகும். நீர் எங்களுக்கு அனுகிரகம் பண்ணுவீராக. தடையான காரியங்களை நீர் அகற்றி போடுவீராக. என்னை நோக்கி கூப்பிடுங்கள் நான் உங்களுக்கு மறுஉத்தரவை அள்ளிச்செய்வேன் என்று சொன்ன கர்த்தர். உம்முடைய பிள்ளைகளின் ஜெபத்திற்கு ஏற்ற பலனை தந்து அதை ஆசிர்வதியும்.

திகையாதே! கலங்காதே! நான் உன் தேவன் நான் உன்னோடுகூட இருக்கிறேன் என்று வாக்களித்த கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை தேற்றும் திடப்படுத்தும் தைரியப்படுத்தும் சந்தோஷப்படுத்தும். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com