Home / முகப்பு / 2000 ஆண்டு பழமையான எகிப்து கல்லறைகளில் தமிழ் வணிகரின் பெயர்: அகழ்வாராய்ச்சியில் வெளிவந்த வியக்கத்தக்க வரலாறு!

2000 ஆண்டு பழமையான எகிப்து கல்லறைகளில் தமிழ் வணிகரின் பெயர்: அகழ்வாராய்ச்சியில் வெளிவந்த வியக்கத்தக்க வரலாறு!

எகிப்தின் புகழ்பெற்ற ‘அரசர்களின் பள்ளத்தாக்கு’ (Valley of the Kings) பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக்கல்லறைகளில் தமிழ் வணிகர் ஒருவரின் பெயர் கண்டறியப்பட்டுள்ளது. ‘சிகை கொற்றன்’ (Cikai Korran) என்ற அந்தப் பெயர், பண்டைய தமிழகத்திற்கும் எகிப்திற்கும் இடையிலான ஆழமான வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைப் பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சான்றாக உருவெடுத்துள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மேற்கொண்ட விரிவான அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வெட்டு ஆய்வுகளின் மூலம் இந்த வியக்கத்தக்கத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பண்டைய எகிப்து மன்னர்களான பார்வோன்களின் கல்லறைகள் அமைந்துள்ள அதே பகுதியில் இந்தப் பெயர் செதுக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அந்த காலத்தில் தமிழ் வணிகர்கள் எவ்வளவு தூரம் துணிச்சலாகப் பயணம் செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ‘சிகை கொற்றன்’ என்ற பெயரின் பொருளை ஆராய்ந்த அறிஞர்கள், ‘சிகை’ என்பது கிரீடம் அல்லது தலைமுடி முடியைக் குறிப்பதாகவும், ‘கொற்றன்’ என்பது சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு தலைவன் அல்லது ஆளுமைமிக்க நபைக் குறிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதன் மூலம், எகிப்திற்குச் சென்ற அந்தத் தமிழர் வெறும் சாதாரண வணிகராக மட்டுமல்லாமல், பெரும் செல்வாக்குமிக்க ஒரு நபராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு வெறும் கல்வெட்டு ஆதாரம் மட்டுமல்ல; இது பண்டைய தமிழகத்திற்கும் மேலை நாடுகளுக்கும் இடையே நிலவிய கடல்வழி மற்றும் நிலவழி வணிகத்தின் உன்னதத்தை விளக்குகிறது. தமிழர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கடினமான தரைவழிப் பாதைகள் மூலமாகவும் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு தங்களின் கலாச்சாரத் தடயங்களை உலகெங்கும் பதித்துள்ளனர் என்பதற்கு இதுவே சாட்சி. இந்த ஆய்வின் மூலம் பண்டைய காலத்திலேயே தமிழர்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கலாச்சாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதும், தமிழர்கள் சர்வதேச வணிகத்தில் முக்கியப் பங்கு வகித்ததும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: Economic Times

Tagged:

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com