தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026-27-ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 2.55 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். கல்வித்துறைக்கு 57,039 கோடி ரூபாயும், சுகாதாரத் துறைக்கு 22,090 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பட்ஜெட் வெறும் கண்துடைப்பு என்றும், தேர்தலை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும் எதிர்க்கட்சியான அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. அவை தொடங்கிய உடனே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு சபைக்கு வந்தனர். அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதாகக் கூறி, தங்களது காதுகளில் பூவைச் சுற்றிக்கொண்டு ‘காது குத்தும்’ போராட்டத்தில் ஈடுபட்டது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் வெற்று அறிவிப்புகளின் தொகுப்பு என்றும் சாடினார். குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளதாகவும், ஆனால் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதாகக் கூறினாலும், நிலுவையில் உள்ள பல திட்டங்களுக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது அதிமுகவின் முக்கிய புகாராக உள்ளது. இந்த அமளியைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.





