மீதேன் மற்றும் எரிவாயு குழாய்களை அமைக்கும் அரசு நிறுவனங்களான ONGC மற்றும் GAIL மேற்கொண்டுவரும் திட்டங்களை எதிர்த்து காவேரி டெல்டா விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் திடீரென்று மத்திய அதிரடி படை போலீசார் ஆய்வு மேற்கொண்டுவருவது விவசாயிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பணியில் இறங்கியிருக்கும் அதிரடி படையினர் தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வுப்பணிகள் போராட்டத்தில் இறங்கியிருக்கும் விவசாயிகளை அச்சுறுத்தும் செயலாக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதைக்குறித்து விவசாயிகள் கூறியது, ‘இந்த காவேரி டெல்டா பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவிக்கவேண்டுமென்று நாங்கள் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் இது நெல் விளைகிற, அமுதம் விளைகிற, பயிர் மற்றும் உளுந்து விளைகிற அருமையான பகுதி. இந்த பகுதியினுடைய வரைபடத்தினை சீர்கொலைத்து வளைகுடா பகுதியைப் போல மாற்றுவதற்கு மத்தியஅரசு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் மதியப்படையினர் இங்கு வரழைத்திருப்பது விவசாயிகள் மத்தியில் பயத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளது.”
காவேரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோலியம் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வடமாநிலங்களிருந்து அதிகாரிகளும், இயந்திரங்களும் வரவழைக்கப்பட இருக்கின்றன. இதனால் போராட்டங்கள் வெடிக்கும் தருவாயில் மத்திய அரசு முன்னெச்சரிக்கையாக அதிரடி படையினரை ஆய்வுப்பணிகளுக்காக டெல்டா மாவட்டங்களில் இறங்கியுள்ளது.




