கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பணிபுரியும் சுமார் 60,000 பொதுத்துறை ஊழியர்கள் இன்று முதல் வாரத்திற்கு ஐந்து நாட்களும் முழுமையாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிறகு நிலவி வந்த நெகிழ்வான பணி முறையை டக் ஃபோர்டு தலைமையிலான மாகாண அரசு ரத்து செய்துள்ள நிலையில், இந்தத் திடீர் மாற்றம் பல்வேறு நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான இடப்பற்றாக்குறை ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவதை கட்டாயமாக்கியுள்ள மாகாண அரசு, அதற்கேற்ப கூடுதல் இடங்களை குத்தகைக்கு எடுக்கவோ அல்லது கட்டிடங்களை வாங்கவோ இல்லை என ஊழியர் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இதனால் அலுவலகங்களில் போதிய மேஜைகள் மற்றும் இருக்கைகள் இன்றி ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒருபுறம் உட்கட்டமைப்பு அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வின்படி அலுவலகங்களில் போதுமான இடவசதி இருப்பதாகக் கூறப்பட்டாலும், மறுபுறம் கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. பல இடங்களில் ஊழியர்கள் மடிக்கணினிகளுடன் சிற்றுண்டி அறைகளிலும் பொது இடங்களிலும் அமர்ந்து வேலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒன்டாரியோ பொதுச் சேவை ஊழியர் சங்கம் (OPSEU) மற்றும் ஏமாப்சியோ (AMAPCEO) போன்ற அமைப்புகள், இந்த முறையற்ற திட்டமிடல் ஊழியர்களின் மனநலத்தையும் உற்பத்தித் திறனையும் பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த விவகாரம் தற்போது ஒன்டாரியோ மாகாண அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஆதாரம்: CBC





