சுவிட்ஸர்லாந்து ஜெனீவாவும், தமிழக பொட்டிபுரமும்
தேனீ மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அமையவிருக்கும் ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்’ சமீப காலத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும் வருகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வின் பின்னணி என்ன, மற்றும் இந்த ஆய்வகத்தை தேனியில் அமைப்பதற்கு எதனால் எதிர்ப்புகள் வருகிறது என ஆராய்ந்ததில் கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுகிறோம்.
இந்த ஆய்வகத்தின் பின்னணி:
இந்த ஆய்வகத்தை இந்தியாவில் அமைக்க, 1989-ம் ஆண்டு முதலே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் 2000ம் ஆண்டு நடந்த ‘High Energy Physics Phenomenology (WHEPP-6)’ என்ற கருத்தரங்கில், மூன்று முக்கிய கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அவை,
1. நம் பிரபஞ்சத்தை வடிவமைப்பதில் நியூட்ரினோக்களின் பங்கு என்ன?
2. நம் பிரபஞ்சத்தில் உள்ள வஸ்து மற்றும் எதிர் வஸ்து பொருத்தமின்மையை புரிந்துக்கொள்ள நியூட்ரினோக்கள் பயன்படுமா?
3. வானியற்பியலின் மூலக்கூறுகளை அறிந்து கொள்ள, நமக்கு நியூட்ரினோக்கள் எவ்வாறு பயன்படும்?
2009ம் ஆண்டு அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், புலிகள் சரணாலயம் மற்றும் யானைகள் நடைபாதையில் (நீலகிரி மாவட்டத்தில்) அந்த ஆய்வகம் அமைக்கப்பட இருந்ததால், அனுமதி மறுத்துவிட்டார். பின்னர், 2010ம் ஆண்டு இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேனீ மாவட்டம் பொட்டிபுரத்தருகில் உள்ள போடி மலையில் அமைக்க அனுமதி அளித்துள்ளது.
இதற்கான காரணங்கள்:
1. போடி மலையில் உள்ள அடர்த்தியான கற்கள், காஸ்மிக் கதிர்களை குறைக்க உதவியாக இருக்கும்.
2. 50,000 டன் எடையுள்ள காந்த தூண்களை அமைக்க, சுமார் 1000 அடிகள் பூமிக்கடியில் துளையிட வேண்டும். இதற்கு தேவையான அடர்த்தியான கற்களான மலை பொட்டிபுரத்தில் உள்ளது.
3. நமது தேனீ மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம், பூகம்பத்தில் பாதிக்க படாத, நிலையான நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது.
இந்த நியூட்ரினோ ஆய்வகத்தை பற்றி 5 முக்கிய குறிப்புகள்:
1. நியூட்ரினோ என்பது ‘லெப்டன்’ குடும்பத்தை சேர்ந்த மிகச்சிறிய அணுக்களாகும். இவற்றின் எடை மற்றும் குணங்களை அறிய இந்த ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
2. இந்த ஆய்வகத்தில் ‘CERN’ என்ற ஜெனீவாவில் இருக்கும் ஆய்வகத்திலுள்ள காந்தத்தை விட நான்கு மடங்கு பெரிய காந்தத்தை மலையை குடைந்து அமைக்க உள்ளனர். 50,000 டன் எடையுள்ள காந்தப்படுத்தப்பட்ட இரும்புத்தூண்களை அமைக்க, சுமார் 800,000 டன் கற்கழிவுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. இந்த ஆய்வகத்திலிருந்து கதிர்வீச்சு இருக்காது என்று விஞ்ஞானிகள் உறுதி கூறுகின்றனர். ஆனால், இந்த ஆய்வகத்தின் வடிவமைப்புத்திட்டத்தை அவர்கள் வெளியிடவில்லை.
4. எவ்வாறான அறிவியல் சோதனைகளை, விஞ்ஞானிகள் அங்கு நடத்துவார்கள், என்று விரிவாக அறிக்கை விடவில்லை.
5. நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மாசு, (அணுசக்தி) மின்சார உபயோகம், மற்றும் கேன்சர் போன்ற உடல் நல பாதிப்புகளை விவாதிக்கவேண்டிய நிலை இருக்கும் பொழுது, இந்த ஆய்வகத்தை அமைக்க தீவிரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
தலைப்பு படம் : By Stefan Keller [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.