கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள மார்க்கம் (Markham) பகுதியில் வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து, அவர்களின் நகைகளை நூதன முறையில் அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யோர்க் பிராந்திய காவல்துறை (York Regional Police) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வகை திருட்டுகள் ‘கவனத்தைத் திசைதிருப்பி திருடுதல்’ (Jewelry Distraction Theft) என்ற அடிப்படையில் நடைபெறுகின்றன. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் முதியவர்களை அணுகும் போது மிகவும் அன்பாகப் பேசுவது போலவும், அவர்களுக்கு உதவி தேவைப்படுவது போலவும் நடித்து இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வீதி முகவரிகளைக் கேட்பது அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்களின் விலாசத்தைத் தேடுவது போன்ற சாக்குகளைக் கூறி முதியவர்களைத் திருடர்கள் நிறுத்துகின்றனர். பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, முதியவர்களுக்கு ‘அன்பளிப்பு’ அல்லது ‘பரிசு’ வழங்குவதாகக் கூறி போலியான கவரிங் நகைகளை அல்லது விலைகுறைந்த ஆபரணங்களை அவர்களுக்கு அணிவிக்க முயல்கின்றனர். இந்தத் தருணத்தை லாவகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திருடர்கள், முதியவர்கள் அணிந்திருக்கும் விலையுயர்ந்த உண்மையான தங்க நகைகளை மிக ரகசியமாகக் கழற்றிவிட்டு, அந்த இடத்தில் போலியான நகைகளை மாற்றிவிடுகின்றனர். பெரும்பாலான தருணங்களில், திருடர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்ற பின்னரே முதியவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், தங்கள் நகைகள் திருடப்பட்டதையும் உணர்கின்றனர். குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களின் வாகன நிறுத்துமிடங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடப்பதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, அறிமுகமில்லாத நபர்கள் உங்களை நெருங்கினாலோ அல்லது உங்கள் தனிப்பட்ட எல்லைக்குள் நுழைய முயன்றாலோ மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, எவராவது உங்களுக்கு இலவசமாக நகைகளை அணிவிக்க முன்வந்தால், அதைத் தீர்க்கமாக மறுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் பகுதியில் யாராவது சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடினாலோ அல்லது உங்களை அணுக முயன்றாலோ உடனடியாக யோர்க் பிராந்திய காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இத்தகைய குற்றச் செயல்களைத் தடுக்கவும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
ஆதாரம்: York Regional Police





