இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனது அடுத்தகட்ட மாபெரும் மைல்கல்லை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன் என்ற இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான முன்னோடி முயற்சியாக ‘ஸ்பேடெக்ஸ்-2’ மற்றும் ‘ஸ்பேடெக்ஸ்-3’ ஆகிய இரண்டு புதிய விண்கல இணைப்பு சோதனைகளை இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த சோதனைகள் விண்வெளியில் இரண்டு விண்கலங்கள் தானாகவே இணைந்து கொள்வதை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டவை. குறிப்பாக நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் சந்திரயான்-4 திட்டத்திற்கும் இந்த தொழில்நுட்பம் மிகவும் அவசியமானதாகும். விண்கலங்கள் ஒன்றோடொன்று மோதாமல் மிகத் துல்லியமாக இணைவது என்பது விண்வெளி அறிவியலில் ஒரு சவாலான காரியமாகும். இதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த புதிய திட்டங்களின் கீழ் விண்கலங்கள் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் அதாவது நீள்வட்ட மற்றும் வட்டப்பாதைகளில் எவ்வாறு துல்லியமாக இணைகின்றன என்பது சோதிக்கப்படும். இது எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கும் அங்கு அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருளை கொண்டு செல்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும். கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமே பெற்றிருந்த இந்த தனித்துவமான தொழில்நுட்பத்தை இப்போது இந்தியாவும் சுயமாக வளர்த்தெடுத்து வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொழில்நுட்ப வெற்றி அடைந்தால் விண்வெளி ஆய்வில் இந்தியா ஒரு புதிய சகாப்தத்தை படைக்கும் என்பதில் ஐயமில்லை. வரும் ஆண்டுகளில் இதற்கான ஏவுதல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





