வட இந்தியாவில் குளிர் காலத்தில் நிலவும் கடுமையான அடர் மூடுபனிக்கு இரவு நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான நுண் துகள்கள் (Particulate Matter) கலந்த காற்று மாசடைதலே முக்கிய காரணம் என்று ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான சர்வதேச ஆய்வு குழு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வானது ‘சயின்ஸ் அட்வான்ஸ்’ மற்றும் ‘ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ ஆகிய சர்வதேச இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. குளிர்காலங்களில் டெல்லி உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் விமானப் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதற்கு இந்த அடர் மூடுபனி ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இரவு நேரங்களில் காற்றில் கலக்கும் நுண் துகள்களின் அடர்த்தி அதிகரிப்பதால், அது ஒரு ‘காக்டெய்ல்’ போன்ற சூழலை உருவாக்கி மூடுபனியின் வீரியத்தை பல மடங்கு அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வு விளக்குகிறது.
இந்த ஆய்வின் மூலம் விமான நிலையங்கள் மற்றும் விமானிகளுக்குத் தேவையான மூடுபனி முன்னறிவிப்புகளை மிகவும் துல்லியமாக வழங்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வளிமண்டலத்தில் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை மாறுபாடுகளுடன், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புகை மற்றும் மாசு துகள்கள் இணையும்போது அடர் மூடுபனி நீண்ட நேரம் நீடிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனப் புகை, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் பிற எரிபொருட்கள் மூலம் வெளியேறும் நுண் துகள்கள் காற்றில் தங்கி மூடுபனியை வலுப்படுத்துகின்றன. இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் வட இந்தியாவில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திட்டமிடவும், குளிர்காலப் போக்குவரத்து சவால்களை எதிர்கொள்ளவும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் வளிமண்டல அறிவியல் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.





