எனது மூதாதயர்கள் உலகின் எந்தெந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்?
பல மானுடவியலாளர்கள் (ஆன்த்ரோபோலொஜிஸ்ட்) நம் மனித இனம் கிட்டத்தட்ட 200,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து தோன்றியிருக்கலாம் என நம்புகின்றனர். ஆப்பிரிக்காவில் மனிதன் தோன்றி மற்ற நாடுகளுக்கு நாடோடியாக சென்று குடியேறியதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கு டி.என்.ஏ ஆராய்ச்சியையும், பூர்வீக மனித எலும்பு படிமங்கள் கொண்டு செய்த ஆராய்ச்சியையும் சாட்சியமாக காண்பிக்கின்றனர்.
இந்த ஆராய்ச்சி தத்துவத்தின்படி மனிதன் 200,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றி, 100,000 ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவிற்கு வந்தடைந்தான். இங்கிருந்து சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன் சீனா மற்றும் தெற்காசிய கண்டங்களுக்கு பயணித்திருக்கிறான். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் தென்கிழக்கு ஆசியாவிற்கும், 30,000 ஆண்டுகளுக்கு முன் பசிபிக் தீவுகளுக்கும் சென்றிருக்கிறான். சீனாவில் இருந்து ரஷ்யாவிலுள்ள பெரிங் ஜலசந்தி வழியாக வட அமெரிக்காவிற்கு 15,000 ஆண்டுகளுக்கு முன் சென்றடைந்திருக்கிறான். இவ்வாறு பூமியின் நிலப்பரப்பு முழுவதும் மனித இனம் பரவி குடியேறியிருக்கிறது.
தற்பொழுது பல நிறுவனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கிற மக்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரியை பெற்று, அதை ஆராய மிகப்பெரிய டி.என்.ஏ தரவுத்தளங்களை அமைத்துள்ளன. இந்த டி.என்.ஏ சோதனை, மிகச்சுலபமாக சிறியளவு உமிழ்நீர் மாதிரியை கொண்டு செய்யப்படும். இம்மாதிரியான டி.என்.ஏ சோதனையில் பல வகைகள் உள்ளன. இவைகளில் முக்கிய வகை ஆட்டோஸோமல் டி.என்.ஏ சோதனை. இந்த சோதனை மூலம் ஒரு நபரின் ஆட்டோஸோமல் கிரோமோசோம்களை கண்டறிய முடியும். இந்த கிரோமோசோம்களில் அந்த நபருடைய டி.என்.ஏவின் சில கூறுகள் அவரது உறவினர்களுடன் ஒற்றிருக்கும்.
உலகில் 700,000 இடங்களுக்கும் மேலிருந்து தருவிக்கப்பட்ட உமிழ்நீர் மாதிரிகளைக்கொண்டு இந்நிறுவனங்கள் உலக டி.என்.ஏ வரைபடத்தை உருவாக்கியுள்ளன. இந்த உலக டி.என்.ஏ வரைபடத்தில் நாம் எங்கு உள்ளோம் என்று நமது உமிழ்நீர் மாதிரியைக்கொண்டு கண்டறிய முடியும். வேறுவிதமாக கூறினால், இந்த ஆட்டோஸோமல் டி.என்.ஏ சோதனை மூலம் நம் மூதாதயர் உலகின் எந்தெந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சுலபமாக அறிய முடியும்.
படம் : By Capri23auto, Lance87 [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
References:
- Quinque, D., Kittler, R., Kayser, M., Stoneking, M., & Nasidze, I. (2006). Evaluation of saliva as a source of human DNA for population and association studies. Analytical biochemistry, 353(2), 272-277.
- Tan, S. G. (1976). Human saliva esterases: Genetic studies. Human heredity, 26(3), 207-216.
- Sun, F., & Reichenberger, E. J. (2014). Saliva as a source of genomic DNA for genetic studies: review of current methods and applications. Oral Health Dent Manag, 13(2), 217-22.