கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில், வளைகுடா நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 11 பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் சமீப காலமாக கடத்தல் சம்பவங்களின் முக்கிய மையமாக மாறி வருவது சுங்கத்துறை அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், கோவை விமான நிலையத்தின் சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் (Air Intelligence Unit) கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் இருந்து வந்த விமானங்களில் பயணம் செய்த 11 பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவர்களது உடமைகளை சோதனையிட்டனர். இந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் மறுசீரமைக்கப்பட்ட மடிக்கணினிகள் (Refurbished Laptops), விலை உயர்ந்த வெளிநாட்டு அலைபேசிகள் மற்றும் சுமார் 3.5 லட்சம் எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.65.99 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 11 பயணிகளிடம் இருந்து இவ்வளவு பெரிய அளவிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் குருவிகளாக செயல்பட்டு பொருட்களைக் கடத்தி வந்தனரா அல்லது இதன் பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய சுங்க வரி செலுத்தாதது மற்றும் ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், சம்மந்தப்பட்ட 11 பயணிகள் மீதும் சுங்க சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும், கடத்தல்காரர்கள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு பொருட்களைக் கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தாண்டி, தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் கடத்தல் அதிகரித்துள்ளதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆதாரம்: Polimer News





