உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ஆசிய சிறுநீரக மற்றும் சிறுநீரகவியல் நிறுவனம் (AINU) ஒரு புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ரொம்ப உப்பு… ரொம்ப ரொம்ப தப்பு’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கம், அதிகப்படியான உப்பு நுகர்வுக்கும் தீராத சிறுநீரக நோய்க்கும் (CKD) இடையிலான நெருங்கிய தொடர்பை பொதுமக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளில் மறைந்திருக்கும் அதிகப்படியான சோடியம், இரத்த அழுத்தத்தை உயர்த்தி சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனைப் பாதிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த விழிப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக ஏப்ரல் 12 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 30 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச சிறுநீரக பரிசோதனை முகாம்களை மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘ரொம்ப உப்பு… ரொம்ப ரொம்ப தப்பு’ என்ற முழக்கத்தின் மூலம், மக்கள் தங்கள் அன்றாட உணவில் உப்பின் அளவைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே சிறுநீரக கோளாறுகளைக் கண்டறிவதன் மூலம் பெரும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என்பதால், இந்த இலவச பரிசோதனை முகாமைப் பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய முடியும் என்பது இந்த பிரச்சாரத்தின் முக்கிய செய்தியாகும்.





