‘முத்தலாக் முறை’ தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

முத்தலாக் முறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் முத்தலாக் தடை மசோதா குறித்த விவாதம் மேற்கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவால் நாட்டில் பிரிவினையை திணிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, ‘ஆண் பெண் சமம் என சொல்வது இந்த இடத்தில் முக்கியம் இல்லை. இந்து மதம் மற்றும் எந்த மதமாக இருந்தாலும் விருப்பம் இல்லாமல் எவரும் சேர்ந்து வாழ முடியாது. எனவே விவாகரத்து பெறுவதற்கு அல்லது கொடுக்க ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் சட்ட உரிமை இருக்கிறது’. இதற்கு எதிர் பதிலை கொடுத்த சட்ட அமைச்சர் திரு.ரவி ஷங்கர் பிரசாத் இதுவரை 2018ம் ஆண்டில் மட்டும் முத்தலாக் முறையில் விவாகரத்து பெற்ற சுமார் 400க்கும் மேற்பட்ட புகார்களின் பெயரில் போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என கூறினார். மேலும் அவர் கூறியதாவது, ‘உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியே தற்போது சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா பாலிசி அமைப்பு என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். அதில் முத்தலாக் முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வலி என்னவென்று புரியவரும்’ என்றார்.

மேலும் இந்த விவாதத்தில், அதிமுக சார்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை மத்திய பாஜக அரசு நிராகரித்து விட்டதாக அதிமுக எம்.பி., திரு.அன்வர் ராஜா குற்றம் சாட்டினார். இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் கூறியதாவது,’ புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு படத்தில் ஒரு பாடல் மிக அருமையாக பாடுவார். தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது, தவறு செய்தவன் திருந்த பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும் – என்று ஒரு பாடல் வரி இருக்கிறது. நீங்கள் வேண்டும் என்றே இதை செய்வீர்கள் என்றால் நீங்கள் வருந்திதான் தீரவேண்டும், வேறு வழியே இல்லை. ஏனென்றால், அதுதான் உங்களுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் கிராமப்புறங்களில் உங்கள் செல்வாக்கை இழந்தீர்கள். ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் நகர் புறங்களில் உங்கள் செல்வாக்கை இழந்தீர்கள். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைத்தால் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றால் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையும் இழந்தீர்கள். அதன் காரணமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் உங்கள் ஆட்சியை இழந்தீர்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு இந்த தோல்வியில் உங்களுக்கு பாடமாக அமைந்திருக்கின்றன என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொண்டு, இந்த சட்டங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நீங்கள் கொண்டுவரவில்லை, இறைவனுக்கு எதிராக கொண்டு வருகிறீர்கள் ஆண்டவனுக்கு எதிராக கொண்டு வருகிறீர்கள். எனவே, இறை தண்டனையிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது என்பதை தெரிவித்துக்கொன்கிறேன்’, என்று கூறினார். இதனை அடுத்து, காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com