இந்தியாவிற்கு தேவையான நவீன இயந்திரங்களை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார் – திருமதி.நிர்மலா சீத்தாராமன்.
இந்திய ராணுவத்திற்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் கூறினார். சென்னை ஆவடியில் உள்ள டேங்கர் தொழிற்சாலையில் இன்ஜின் தயாரிப்பு பிரிவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ராணுவ இன்ஜின்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் இந்திய ராணுவத்திற்காக அர்ப்பணித்தார். இந்த நவீன இன்ஜின்கள், ராணுவத்தில் உள்ள பீரங்கிகளான அஜீயா பீரங்கி டீ-72 மற்றும் பீஷ்மா பீரங்கி டீ-90 ஆகியவற்றிற்காக தயாரிக்கப்பட்டவைகள். திருமதி.சித்தராமன் அவர்கள், இந்திய இராணுவத்தின் துணைத் தலைவர் தேவராஜ் அன்பு அவர்களிடம் இந்த இரண்டு வகையான இயந்திரங்களின் ஆவணங்களை இன்று ஒப்படைத்தார். இந்த முயற்சிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 கோடி ரூபாய் வரை சேமிக்கப்படும்.
இந்த வீ92எஸ்2 இன்ஜின்கள், 1000 குதிரைத்திறன்களை உடையது. இந்த இயந்திரங்கள் ரஷ்ய வடிவமைப்பு அடிப்படையில் தயாரிக்கப்பட்டன. இதன் மதிப்பு 42 லட்ச ரூபாய்கள் ஆகும். இவற்றை ராணுவத்திற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன், நாட்டின் பாதுகாப்பின் சார்பான பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். நாட்டின் பாதுகாப்பு சார்பான பொருட்களை உற்பத்தி செய்ய நம்மால் முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். டர்போசார்ஜர், சூப்பர்சார்ஜர், எரிபொருள் உட்செலுத்தும் பம்புகள் போன்ற முக்கியமான இயந்திரங்களுக்காக ரஷ்ய நாட்டை இந்தியா சார்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்து அவர் கூறியதாவது, “நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான விஷயத்தை கூட நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம் என்றால், அது நாட்டின் பாதுகாப்பிற்கே சில சமையம் இடைஞ்சலாக அமையலாம், அல்லது தேவைப்படும் போது கிடைக்காமல் போகலாம், தேவைப்படும் போது கிடைத்தலுமே அதை நாம் சரியாக சர்வீஸ் செய்ய முடியாமல் அதற்கு கூட நாம் அவர்களை கூப்பிட வேண்டிய நிலைமை இருக்கும். அதனால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் எல்லாம் ஒரே மாதிரியாக பட்டவை இல்லை. அத்தியாவசிய பொருட்கள் ஒன்று இருந்தாலும், அதி அத்தியாவசியமாக இருக்க கூடிய, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நாம் இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்தது. இதை தவிர்க்க வேண்டும் என்பதற்கு, நம்மால் முடிந்தவரை (பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை) உற்பத்தி செய்ய முடியுமா என்பதும் ஒரு கேள்வி. உற்பத்தி செய்ய முடியும் என்று இன்று நீங்கள் செய்து காட்டி இருக்கின்றீர்கள்”.