டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது!
தென் கிழக்கு வங்கக்கடலில் தற்பொழுது மய்யம் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகரும் பொழுது டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிவரும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து வானிலை மையத்தின் இயக்குனர் திரு.பாலச்சந்திரன் கூறியதாவது, “தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக…இது மேற்கு நோக்கி நகரும் திசையில்…நகரக்கூடிய நிலையில், வரும் டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும். டிசம்பர் 4ம் தேதி பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் வட தமிழகம் மற்றும் புதுவையில்…அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில் டிசம்பர் 4ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவையிலும் டிசம்பர் 5ம் தேதி வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் டிசம்பர் 2,3 தேதிகளில் நகரின் சில பகுதிகளில் லேசான மழையும், 4,5,6 ஆகிய தேதிகளில் சிலமுறை மிதமான மழையும் பெய்யக்கூடும்”.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பகுதிகளிலும், அந்தமான் கடலுடன் இணைந்திருக்கும் மீதமுள்ள கடல் பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது நிலவுகிறது. டிசம்பர் 6ம் தேதி பூமத்திய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் புதுவை மற்றும் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.