துணை
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பது பதினேழில் நான் சிறுமையும், எளிமையும் ஆனவன். கர்த்தரோ என் மேல் நினைவாய் இருக்கிறார். தேவரீர்! என்னுடைய துணையும் என்னை விடுக்கிறவருமாய் இருக்கிறீர். என் தேவனே தாமதியாயும். இது தாவீதினுடைய இன்னொரு சிறப்பான ஜெபம். நான் சிறுமையும் எளிமையுமானவனாய் இருக்கிறேன். என்னுடைய ஜெபத்தை கேட்பீராக.
கர்த்தாவே, நான் ஒரு சாதாரண மனிதன், நான் ஒரு எளியவன், நான் ஒரு ஏழை, ஒரு ஆதரவற்றவன். அநாதையான நிலையிலே காணப்படுகிறேன். ஆனால் ஆண்டவரே! நீர் என்னை நினைத்திருக்கிறீர், என்னை நோக்கி பார்த்து கொண்டிருக்கிறீர். நீர் எனக்கு நன்மை செய்வீர் என்று சொல்லி நான் நம்புகிறேன். நீர் எனக்கு உதவி செய்வீராக. கர்த்தாவே! நீர் என் துணையாக இருந்தருளும். என்னை விடுவிக்கிறவராக இருந்தருளும். சத்ருக்களாலும், தீயவர்களாலும் துரோகிகளாலும் சண்டாளர்களாலும் வரக்கூடிய எல்லா இக்கட்டுகளுக்கும் நாச மோசங்களுக்கும் என்னை விடுவிப்பீராக! எளியவனாகிய என்னை ஏழ்மையானவனாகிய என்னை கர்த்தருடைய கரமே விடுவிப்பதாக! எனக்கு உதவி செய்வதாக!
கர்த்தாவே! நீர் தாமதியாமல் என்னுடைய நெருக்கத்திலே இருந்து என்னை விடுவிக்கும்படியாக நீர் துரிதமாய் என் பக்கமாக வர வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். உம்முடைய தயையுள்ள கரம் என்னை பெற்றுக்கொள்ளட்டும், விடுவிக்கட்டும், எனக்கு சந்தோஷத்தை சமாதானத்தை தரட்டும். இரக்கமுள்ள ஆண்டவரே! நான் உம்மை நோக்கி பார்க்கிறேன். எளிமையான என்னை உமக்கு முன்பான அற்பணிக்கிறேன். சர்வ வல்லமையுள்ள தேவன் தம்முடைய பலத்த கரத்தினால், சத்ருக்களுடைய கரத்திலிருந்து என்னை விடுவிப்பீராக. எனக்கு வேண்டிய உதவி, ஒத்தாசைகளை கட்டளையிடுவீராக. நீர் என்னை பலப்படுத்தும், திடப்படுத்தும், என்னை ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்தும்.
கர்த்தாவே! இந்த வேளையிலும் உம்மை நோக்கி மன்றாடி வேண்டிக்கொண்டிருக்கிற எந்தவொரு சகோதரனையும், சகோதரியையும் நீர் ஆசிர்வதிப்பீராக. அவர்களை நீர் சந்தோஷப்படுத்துவீராக. எம்முடைய துக்கங்கள், கவலைகள், கண்ணீர்கள் எல்லாவற்றையும் எடுத்துபோடுவீராக. பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்