கர்த்தரின் இரக்கம்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பது பதினொன்றில், கர்த்தாவே! நீர் உம்முடைய இரக்கங்களை எமக்கு கிடையாமற் போகப்பண்ணாதேயும். உமது கிருபையும் உமது உண்மையும் எப்போதும் என்னைக் காக்கக்கடவது. இது தாவீதினுடைய ஒரு விஷேசித்த விண்ணப்பமாக அமைந்திருக்கிறது. உம்முடைய இரக்கங்பளை எமக்கு கிடையாமற் போகப்பண்ணாதேயும் என்று அவன் வற்புறுத்தி வேண்டிக்கொள்கிறான். எனக்கு உம்முடைய தயவு கண்டிப்பாக வேண்டும். நான் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறேன். உம்முடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நீர் எனக்கு உதவிச் செய்வீராக. உம்முடைய நன்மைகளைக் கட்டளையிடுவீராக. நீர் என்னை மறந்துவிடக்கூடாது என்று சொல்லி அவன் வேண்டிக்கொள்கிறான். உமது கிருபையும் உமது உண்மையும் எப்போதும் என்னைக் காக்கக்கடவது. நான் உம்மையே தஞ்சமாகக் கொண்டிருக்கிறேன். உம்மையே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீர் என்னைக் கைவிடாதிரும். நீர் எனக்கு உதவி செய்யும். உம்முடைய கிருபை எனக்கு வேண்டும். உம்முடைய உண்மையின்படி நீர் என்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொல்லி மன்றாடி வேண்டிக் கொள்கிறான். எவ்வளவு ஒரு பெரிய வாஞ்சை என்று பாருங்கள். உம்முடைய இரக்கங்கள் எமக்கு கிடையாமற் போகப்பண்ணாதேயும். என்னை நீர் நினைத்துக் கொண்டே இருப்பீராக. எனக்கு அருள் செய்வீராக. எனக்கு நன்மை செய்வீராக.
இரக்கமுள்ள ஆண்டவரே! உம்மை நோக்கி பார்க்கிற தம்முடைய பிள்ளைகளுக்கு நீர் மனதுருக்கம் உள்ள ஆண்டவராக, அவர்களுடைய வாஞ்சைகளை நீர் நிறைவேற்றுகிற தேவனாக இருக்கிறீர். அவர்கள் விரும்பி கேட்கிறவைகளை கொடுத்து அவர்களை ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துகிற தேவனாக இருக்கிறீர். உம்மிடத்தில் வந்த எந்த சகோதரனையும் சகோதரியையும் வெறுமையாக போனதில்லை கர்த்தாவே! நீர் அற்புதங்களை செய்கிறவரும் அடையாளங்களை செய்கிறவரும் நன்மைகளை கொடுத்து சந்தோஷப்படுத்துகிறவருமாக இருக்கிறீர். அந்த தயவுக்காக உம்மை ஸ்த்தோத்திரிக்கிறோம். நன்றி செலுத்துகிறோம்.
இரக்கமுள்ள ஆண்டவரே! இப்பொழுது உம்முடைய சமூகத்திலே கூடி வந்து மன்றாடி வேண்டிக்கொண்டிருக்கிற எந்தவொரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் நன்மைகளை கொடுத்து அவர்களை ஆசிர்வதிப்பீராக. அவர்களை சந்தோஷப்படுத்துவீராக. ஏசுவின் நாமத்தினால் பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்