மன்னித்தருளும்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் இருபத்தி ஐந்து ஏழில் என் இளவயதின் பாவங்களையும் என் நீடுதல்களையும் நினையாதிரும். கர்த்தாவே! உம்முடைய தைரியத்தின் நிமித்தம் என்னை உமது கிருபையின் வழியே நினைத்தருளும். தாவீது ஒளிவு மறைவின்றி தன்னுடைய குற்றங்குறைகளை மறைத்து கொண்டு அவன் ஆண்டவரிடத்திலே ஜெபிக்கவில்லை. மாறாக என் இளவயதின் பாவங்களையும் என் நீடுதல்களையும் நீர் நினையாதிரும் என்று சொல்கிறான்.
எம்முடைய கிரியைகள் உமக்கு தெரியும் உம்முடைய கண்களுக்கு மறைவாக நான் எந்த காரியங்களையும் செய்துவிட்டு ஒழிந்து கொள்ள முடியாது. நீர் பார்க்கிறீர். என்னுடைய கிரியைகள் என்னுடைய செயல்பாடுகள் என்னுடைய குற்றங்குறைகள் பாவக்கிரியைகள் எல்லாவற்றையும் நீர் அறிந்து இருக்கிறீர். அது உமக்கு தெரியும். ஆனால் ஆண்டவரே அவைகளை நினைத்து என்னை தண்டித்துவிடாதேயும். என்னை அழித்து போடாதேயும். உம்முடைய கோபத்தினால் எனக்கு தண்டனைகளை அனுப்பிவிடாதேயும்.
உம்முடைய தயவு உம்முடைய இரக்கம் உம்முடைய கிருபை என்னை தாங்கட்டும். பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான், அறிக்கை செய்துவிட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று சொன்னீரே. நீர் நீதிகளை அறிந்த தேவன் இவைகளை அறிக்கையிடுகிற என் பேரிலே கிருபையாய் இருப்பீராக. என்னுடைய இளவயதின் பாவங்கள் குற்றங்களை மன்னித்து எனக்கு இரக்கம் பாராட்டுவீராக. உம்முடைய கிருபை என்னை தாங்கட்டும். நீர் மன்னிக்கிறவர். நீர் இரட்சிக்கிறவர். நீர் மீட்டுகொள்கிறவர். திரும்பவும் சந்தோஷத்தை தந்து என்னை மகிழ பண்ணுகிறவர் கர்த்தாவே. ஆகவே ஆண்டவரே நீர் எனக்கு அருள் செய்வீராக.
மனதுருக்கம் உள்ள ஆண்டவர் எனக்கு உதவி செய்வீராக. இந்த ஜெபத்தை கேட்டு எனக்கு நன்மைகளை அள்ளி தாரும் என்று சொல்லி மன்றாடி ஜெபிக்கிற தாவீதை போன்று சகோதரர்களே நாமும் ஜெபிப்போம். கர்த்தர் அவருடைய கண்களில் எல்லாவற்றையும் பார்க்கிறவர். அவருடைய கண்களுக்கு மறைவாக நாம் எந்தவொரு காரியத்தையும் மறைத்துவிட முடியாது. அவர் தூரத்தில் இருந்து நம்மை பார்க்கிறார். நம்முடைய கிரியைகள் எல்லாம் அவருக்கு வெளிச்சமாக உள்ளது. அதை பெற்று கொள்வோம். ஆண்டவரிடத்தில் அறிக்கையிடுவோம். கிருபைக்காக மன்றாடுவோம். அவர் நம்மை ஆசிர்வதிப்பார். அவருடைய இரக்கத்திற்காக மன்றாடுகிற எந்தவொரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இரக்கம் பாராட்டுவார்.
இரக்கமுள்ள ஆண்டவரே! எங்களை தாழ்த்தி அற்பணிக்கிறோம், அறிக்கையிடுகிறோம், மன்னிப்பிற்காக கெஞ்சிகிறோம். நீர் எங்களை இரட்சித்து கொள்ளும். உம்முடைய வல்ல கரத்தினால் எங்களை அரவணத்து கொள்வீராக. உம்முடைய நன்மைகளினால் எங்களை ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்