மன்றாடல்
இன்றைய நாளிலே தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். ஒன்று நாலகமம் பதினான்காம் அதிகாரம் பத்தாவது வசனத்திலே பெலிஸ்தியருக்கு விரோதமாக போகலாமா? அவர்களை என் கையில் ஒப்புகொடுப்பீரா? என்று தாவீது கர்த்தர் இடத்திலே மன்றாடி ஜெபிக்கிறான்.
பெலிஸ்தியர் தாவீதுக்கு எதிராக பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்கள்கூட வந்து பட்டணங்களை சூழ்ந்து இருக்கிறபொழுது அவன் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். தன்னுடைய மந்திரி சபைகளை கூட்டியோ அல்லது இராணுவ தளபதிகளை கூட்டியோ அவன் ஆலோசனை கேட்கவில்லை. மாறாக சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருடைய சமூகத்திலே தன்னை தாழ்த்தி அவருடைய கிருபைக்காக கெஞ்சி நிற்கிறான்.
தாவீது எந்த சூழ்நிலைகளிலும் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கிறவன். கர்த்தரிடத்திலே ஒரு காரியத்தை சொல்லாமல் அவருடைய பதிலை பெற்றுகொள்ளாமல் அவன் துணிந்து ஒரு காரியத்திலையும் இறங்கினது இல்லை. அதனால்தான் கர்த்தர் சொல்கிறார் என் தாசனாகிய தாவீது நடந்ததைபோல என்று அடிக்கடி வேதவசனத்திலே சொல்கிறதை நாம் பார்க்கிறோம். கர்த்தரிடத்திலே கேட்கிறவன், தன்னுடைய பாரங்களை ஆண்டவருடைய சமூகத்திலே இறக்கி வைக்கிறவன் இந்த நேரத்திலும் இந்த பெலிஸ்தியருடைய இராணுவவீரர்கள் தன்னை சுற்றி வந்திருக்கிற நேரத்திலும் கர்த்தருடைய உதவியை நாடி ஜெபிக்கிறான். நாமும் அதே போன்று கடவுளை நோக்கி ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
எத்தனை இடர்பாடுகள் இருந்தாலும், எத்தனை சத்ருக்களின் போராட்டங்கள் நமக்கு வந்தாலும் எந்த வியாதி நொடிகள் நம்மை சூழ்ந்து வந்தாலும் நம்முடைய பரம தகப்பனாகிய ஆண்டவரை நோக்கி நாம் ஜெபிக்க முன்வருகிறபொழுது கர்த்தர் நம்முடைய ஜெபத்தை கேட்பார். நம்முடைய வாஞ்சைகளை நிறைவேற்றி நம்மை ஆசிர்வதிப்பார். இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். தாவீதை போன்று எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நெருக்கடியான சமயங்களிலும் உம்மை நோக்கி ஜெபிக்கிற வாஞ்சையை தாரும்.
நீர் எங்களுடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறவர் நீர் எங்களை ஆசிர்வதிக்கிறவர். இந்த வேளையிலும் நறுங்கொண்ட நறுங்கொண்ட இதயத்தோடு பாரத்தோடு கண்ணீரோடுகூட உம்மை நோக்கி மன்றாடி வேண்டிகொள்கிற ஒவ்வொரு பிள்ளைகளுடைய ஜெபத்தை கேட்டு நீர் அவர்களை ஆசிர்வதிப்பீராக. நன்மையான காரியங்களை கொடுத்து அவர்களை சந்தோஷபடுத்துவீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்