நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க முடியாமல் பதவியில் இருந்து விலகினார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா!
நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க முடியாமல் பதவியேற்ற முயன்றாவது நாளிலேயே தாமாகவே முன்வந்து இன்று பதவியில் இருந்து விலகினார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா! சட்டப்பேரவை வளாகத்திலிருந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர், ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் இன்று அளித்தார்.
இந்த முடிவைப் பற்றி சட்டப்பேரவையில் நடத்திய உரையில் அவர் கூறியதாவது, “எனக்கு அவகாசம் வழங்கிய சபாநாயகருக்கு மிக்க நன்றி! நான் இந்த சூழலைத் தொடர விரும்பவில்லை. எனவே, நேராக ஆளுநர் மாளிகைக்குச் சென்று பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளேன்.”
224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், சில நாட்களுக்கு முன் 222 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டமன்றம் அமைந்தது. 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருந்த நிலையில், கர்நாடக கவர்னர் எடியூரப்பாவை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் 15 நாட்களில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கவும் கட்டளையிட்டார். பதவியேற்ற மூன்றாம் நாளிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் தனது பதவியை எடியூரப்பா இன்று ராஜினாமா செய்தார்.
இதை பற்றி அவர் சட்டப்பேரவையில் கூறியதாவது, “காங்கிரஸ் மட்டும் அல்ல மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதை மக்கள் விரும்பவில்லை. மக்களின் பெரும்பான்மை ஆதரவு காங்கிரஸுக்கு இல்லை. மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியையும் அவர்கள் ஆதரிக்கவில்லை. மக்கள் விருப்பம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனது உடலில் உயிர் இருக்கும் வரை கர்நாடக மக்களுக்காக போராடுவேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி பாரதிய ஜனதா அரசுக்கு பலம் சேர்ப்பேன். அதுதான் பிரதமர் மோடிக்கு நான் செய்ய இருக்கும் பிரதிபலனாக இருக்கும்.”
எடியூரப்பா இன்று பதவி விலகியதால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கர்நாடக சட்டமன்ற வளாகத்திலேயே தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். மக்கள் சக்தியே மகத்தானது என்று பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் மோடிக்கும் கர்நாடகத்தில் பாடம் கற்பிக்கபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர், கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சி MLAக்களை, பாரதிய ஜனதா கட்சி விலை பேசியதாக குற்றம் சாட்டினார். கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்ற பட்டதாக கூறிய அவர், இதற்காக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சி MLAக்களுக்கு நன்றி தெரிவித்தார்.