6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…3
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும்.
ஆண்டுகள் பல கடந்தது. திரும்பவும் அந்த கிராமத்தில் யானையின் மணியோசை கேட்கிறது. சிறியோர், பெரியோர் அனைவரும் கூடி யானைக்கு தேங்காய், வாழைப்பழம், கரும்பு கொடுத்து மகிழ்கிறார்கள். யானையின் முதுகில் ஏறியும் சவாரி செய்கிறார்கள். தெருவெங்கும் கூட்டம். திடீரென்று யானை கூட்டத்திற்குள் பாய்ந்து ஒரு வாலிபனை தன் துதிக்கையால் பிடித்து தரையில் அடித்து கொன்று போட்டது. அப்பொழுது தெருவில் யாரும் இல்லை. எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டார்கள். எல்லோருக்கும் ஒரே பயம், ஒரே கேள்வி? யானை ஏன் அந்த வாலிபனைக் கொன்றது? உண்மை இதுதான்: பல ஆண்டுகளுக்கு முன் யானை கிராமத்திற்கு வந்தபோது ஒரு விபரீதம் நடந்து போயிற்று. சிறுவன் ஒருவன் தன் பங்காக யானைக்கு தேங்காய் கொடுத்தான். அதை உட்கொண்ட யானையின் வாயெல்லாம் புண்ணானது. சிறுவன் தேங்காய் மூடியில் சுண்ணாம்பு வைத்து கொடுத்ததுதான் காரணம். அந்த காரியத்தை யானை மனதில் வைத்திருந்தது. பல ஆண்டுகளுக்கு பின்னர் யானை அந்த சிறுவனை அடையாளம் கண்டு கொன்று போட்டது. “முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்” என்பார்கள். யானை ஒரு மிருகம் அதற்கு மன்னிக்கும் சுபாவம் இல்லை. அது வர்மம் வைத்துக் கொன்றது. நமக்கு நன்மை, தீமை எது என்று தெரியும். நாம் செய்த பெரிய தவறுகளையெல்லாம் பெரியவர்கள் நமக்கு மன்னித்திருக்கிறார்கள். மன்னிப்பை பெற்ற நாமும் பிறரை மன்னிக்க வேண்டும். நாம் மன்னிக்கா விட்டால் நம் வாழ்வு மிருகத்திற்கு சமமாகும். மன்னிப்போம், பிதாவின் மன்னிப்பைப் பெற்று பெருவாழ்வு பெறுவோம். அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருப்போம்.
6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Sasin Tipchai [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.