ஸ்டெர்லைட் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது | Read the scientific proof against Sterlite!
தூத்துக்குடி துறைமுக மற்றும் கடலோர நகரங்களில் நிலத்தடி நீரில் கன உலோகங்கள் மற்றும் நுண்ணுயிரியல் கலப்படம் குறித்து கடந்த ஆண்டில் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட 10-50 மீட்டர் ஆழம் வரை தோண்டிய நீர் துளைகளே இந்த பகுதியில் முக்கிய குடிநீர் ஆதாரங்களாகும். கடந்த முப்பது ஆண்டுகளாக பல இரசாயன மற்றும் மருந்துத் தொழில்கள் இந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளன.
இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவு பொருட்கள், சுற்றியுள்ள நிலப்பகுதி, நீர்ப்பாசன துறைகள் மற்றும் மேற்பரப்பு நீர்வழிகள் ஆகியவற்றில் நேரடியாக வெளியேற்றப்படுகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளே இப்பகுதியில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் மூல ஆதரங்கள் ஆகும்.
இயற்பியல்-ரசாயன பண்புகள், சுவடு உலோகங்கள், கன உலோகங்கள் மற்றும் குடிநீரின் நுண்ணுயிரியல் தரம் ஆகியவை இந்த ஆய்வில் ஆராயப்பட்டன. இந்த ஆய்வில் கன உலோகங்கள், ‘Inductively Coupled Plasma Mass Spectrometry’ என்ற அறிவியல் முறையின் படி ஆராயப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகள், உலக சுகாதார நிறுவனத்தின் குடிநீர் தர நெறிமுறைகள் வைத்து ஒப்பிடப்பட்டன.
மலத்திலுள்ள கோலிஃபார்ம் பாக்டீரியா இருக்கிறதா என்று கண்டுபிடிக்க உயிர்வேதியியல் சோதனைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் கரிம மாசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலத்தடி நீர் மாதிரிகள் முடிவுகளை உலக சுகாதார நிறுவனத்தின் குடிநீர் தர நெறிமுறைகள் வைத்து ஒப்பிடுகையில், நிலத்தடி நீர் மாதிரிகள் மிக அதிக அளவில் ஆர்செனிக், செலினியம், ஈயம், போரோன், அலுமினியம், இரும்பு மற்றும் வெண்ணடியம் போன்ற கனரக உலோகங்களால் மாசுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. செலீனியம் என்ற ரசாயனம் நிலத்தடி நீரில் 0.01 ml/L அளவிற்கு மேல், 82% ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் காணப்பட்டன. ஆர்சனிக் என்ற ரசாயனம் நிலத்தடி நீரில் 0.01% mg/L அளவிற்கு மேல், 42% ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. காப்பர், அல்கலி ரசாயனம், உரம், வெப்ப ஆலை மற்றும் கடல் சார்ந்த உணவு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளே இவ்வித கன உலோக மாசு ஏற்பட காரணம் என்று இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் நிலத்தடி நீரிலுள்ள மாசு துல்லியமாக அளவிடப்பட்டுள்ளது: மொத்த கோலிஃபோர்ம் எனப்படும் நுண்ணுயிரிகளின் சராசரி அளவு 0.6 – 145 MPN/mL, மலத்திலுள்ள கோலிஃபோர்ம் சராசரி அளவு 2.2 – 143 MPN/mL, எஸ்சேறிச்சியா கோலி எனப்படும் நுண்ணுயிரின் சராசரி அளவு 0.9 – 40 MPN/mL மற்றும் மலத்திலுள்ள ஸ்ட்ரெப்டோகாக்கய் எனப்படும் நுண்ணுயிரின் சராசரி அளவு 10 – 9.80 x 102 CFU/mL ஆகும். மொத்த கோலிஃபோர்ம் பாக்டீரியா, மலத்திலுள்ள கோலிஃபார்ம் பாக்டீரியா மற்றும் ஈ.கோலை பாக்டீரியா ஆகியவற்றால் கரையோரப் பகுதிகள் மிகவும் அசுத்தமடைந்துள்ளன. ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளிருந்து வெளிவரும் கழிவுப்பொருட்கள் நிலத்தடி நீர் மாசுபட முக்கிய காரணங்களாக இருக்க, மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் தூத்துக்குடி நகரத்திலிருந்து Buckle வாய்க்கால் மூலம் வரும் கழிவு நீர் கலப்படம் போன்ற பிற காரணங்களாலும் நிலத்தடி நீர் மாசுப்பட்டிருக்கலாம், என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Source: Selvam S, Ravindran AA, Venkatramanan S, Singaraja C. Assessment of heavy metal and bacterial pollution in coastal aquifers from SIPCOT industrial zones, Gulf of Mannar, South Coast of Tamil Nadu, India. Applied Water Science. 2017 May 1;7(2):897-913.