பாராளுமன்ற வாக்கெடுப்பை அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. தலைவர் இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியிலிருந்து நீக்கிய இலங்கை ஜனாதிபதி சிரிசேனா புதிய பிரதமராக ராஜபக்சேவை சில நாட்களுக்கு முன் ஜனநாயகதிற்கு எதிராக நியமித்தார். இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரான கரு.ஜெயசூரியா நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் சிரிசேனாவிற்கு ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், சிரிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஐ.நா சபை பொது செயலாளர், ‘அனைத்து கட்சிகளும் பேச்சு நடத்தி அரசியல் குழப்பங்களை தீர்க்க ஐ.நா சபை தயாராக உள்ளது’, என கூறினார்.
இதை குறித்து நீக்கப்பட்ட இலங்கை பிரதமர் கூறியதாவது, ‘இலங்கை ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தல்களில், பாராளுமன்றத்தின் விருப்பத்திற்கு ஏற்ப ஜனாதிபதி செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் பதவி ஏற்றோம். அரசியலமைப்பின் 19 வது திருத்தம் இந்த அடிப்படையிலேயே திருத்தப்பட்டது. இப்போது, ஜனாதிபதி பாராளுமன்ற அதிகாரங்களை புறக்கணிக்க முயற்சிக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே அமைச்சகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களைப் தங்கள் பக்கம் சேர்ப்பதற்காக அமைச்சர் பதவி மற்றும் பணம் லஞ்சமாக கொடுக்க முயற்சி செய்யப்படுகிறது’ என்று கூறினார்.
ஐ.நா சபை பொது செயலாளரான அன்டோனியோ கெட்டரேஸ் மேலும் கூறுகையில், ‘இலங்கையில் தற்போது நிலவும் அரசியலமைப்பு நெருக்கடியை தீர்ப்பதற்கு சட்டமன்றம் கூட வேண்டும். அமைதி, பாதுகாப்பு மற்றும் சட்டத்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் வரும் நவம்பர் 7ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் சிரிசேனா அறிவித்துள்ளார்.