நம்பிக்கை இல்லா தீர்மானம் | ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரை
இந்திய நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தியின் அனல் பரந்த உரையிலிருந்து மொழிபெயர்த்த சில பகுதிகளை தொடர்ந்து படியுங்கள்:
1. “ஜூம்லா ஸ்ட்ரைக்ஸ்” | தமிழாக்கம் – மிகைப்படுத்தப்பட்ட பொய்கள்:
“இரண்டு சுவாரஸ்யமான பேச்சுகள். டி.டி.பி கட்சியின் உரையை மிகவும் கவனமாக கேட்டேன். அதில், நான் கவலை மற்றும் ஒரு ஆழமான வலியை உணர்கிறேன். நீங்கள் 21 ஆம் நூற்றாண்டு அரசியல் ஆயுதத்தினால் பாதிக்கப்பட்டவர் என்று நான் சொல்ல விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான ஆயுதம். இதில் நீங்கள் தனியாக இல்லை. இந்த ஆயுதத்திற்கு பெயர் “ஜூம்லா ஸ்ட்ரைக்ஸ்”., அதாவது “மிகைப்படுத்தப்பட்ட பொய்கள்”. ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்குகளில் ரூ 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று கூறினீர்களே? இந்த பணம் எங்கே? இது ஜும்லா நம்பர் 1. இந்திய இளைஞருக்கு 1.2 கோடி வேலைகள் உருவாக்குவோம் என்று உறுதி கூறினீர்களே? இந்த வேலைகள் எங்கே? இது ஜும்லா நம்பர் 2. நம் நாட்டின் இளைஞர் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உண்மை என்னவென்றால், வெறும் 4 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. ஆனால் சீனா என்ன செய்கிறது?… 24 மணிநேரத்தில் 50,000 இளைஞர்களுக்கு வேலைகளை வழங்கியுள்ளனர். சில நேரங்களில் ‘பாக்கோடாக்களை செய்யுங்கள்’ என்று கூறுகிறீர்கள், மேலும் ‘கடைகளை திறவுங்கள்’ என்றும் கூறுகிறீர்கள். யார் நம் நாட்டின் இளைஞருக்கு வேலை கொடுப்பார்கள்?”
2. டீமானிடைசேஷன் – செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு!
“அவர் இந்த செய்தியை எங்கிருந்து பெற்றார் என்பது தெரியாது, ஆனால் திடீரென்று அனைத்து ரூபாய் நோட்டுகளையும் செல்லாது என்று நள்ளிரவில் அறிவித்தார். தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை சில்லறை பணத்திலேயே நடத்துகிறார்கள் என்பது புரியவில்லை போலும்…? நான் சூரத் நகருக்கு சென்றிருந்தேன். அங்குள்ள வியாபாரிகள் எப்படி இந்த அறிவிப்பால் தவிக்கிறார்கள் என்று என்னிடம் கூறினார்கள்.”
3. டோக்லாம் மோதல்
“சீனர்கள் முன் நமது வீரர்கள் தைரியமாக எதிர்த்து நிற்கும் நேரத்தில், நமது பிரதமர் ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லாமல் சீனா செல்கிறார்.”
4. ரபேல் போர் விமானம்
“நம் பிரதமர் பிரான்சிற்கு செல்கிறார், ரபேல் ஜெட் விலை திடீரென்று காரணமில்லாமல் உயருகிறது. பாதுகாப்பு அமைச்சர் இங்கே இருக்கிறார். அவர் ரபேல் ஜெட் விமானத்தின் விலையை நமக்கு கூறுவதாக சொன்னார். பின்னர், இந்தியாவும் பிரான்ஸும் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டதால் விலை கொடுக்க முடியாது என்று அவர் கூறினார். விலை விவரங்கள் எங்கே? நான் பிரான்சின் பிரதமரை சந்தித்தேன், இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலே இந்த ரகசிய உடன்பாடு இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர், அப்படி எந்தவித ரகசிய உடன்படிக்கையும் இல்லை என்று கூறினார்.”
5. ஜி.எஸ்.டி. வரி
“ஜி.எஸ்.டி. வரி காங்கிரஸ் கொண்டு வந்தது. நீங்கள் அதை எதிர்த்தீர்கள். அன்றைய குஜராத் முதல்வர் எதிர்த்தார். நாங்கள் பெட்ரோல் / டீசல் உட்பட ஒரு ஒன்றுபட்ட ஜி.எஸ்.டி. வரி தேவை என்று கூறினோம். இந்திய நாட்டிற்கு ஒன்றுபட்ட வரியை முன்மொழிந்தோம், இதனால் மக்களுக்கு குறைந்த அளவில் இடையூறுகள் இருந்திருக்கும். மோடியின் ஜி.எஸ்.டி 5 வகை வரிகளை கொண்டுள்ளது. மேலும் நீங்கள், சிறு வணிக உரிமையாளர்களின் வீடுகளுக்கு நீங்கள் வருமான வரித் துறையை அனுப்பியுள்ளீர்கள்.”
“எனக்கு தெரியும், இப்பொழுது அவர் சிரிப்பதை நான் பார்க்க முடிகிறது, ஆனால் அவருக்குள் ஒரு பதட்டம் இருப்பதை நான் காண்கிறேன். அவர் என்னை பார்க்காமல் வேறு எங்கோ பார்க்கிறார். நான் புரிந்துக்கொள்கிறேன். அவரால் என் கண்களை பார்க்க முடியவில்லை. ஏனெனில் பிரதமர் உண்மையாக இருக்கவில்லை.”
இவ்வாறு ராகுல் காந்தி பாராளுமன்றத்தில், மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் கொள்கைகள் மீது கடுமையான
எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால் பிரதமரை ராகுல் காந்தி, கை கொடுத்து, கட்டிப்பிடித்து தனது உரையை முடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, பிரதமரின் வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளை ‘ஜும்லா’ அல்லது ‘மிகைப்படுத்தப்பட்ட பொய்கள்’ என்று கூறி, 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்கள் உண்மைக்கு புறம்பானவைகள் என்று கூறி தன் உரையை முடித்தார்.