தேவனின் வாக்கு
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இன்றைய ஜெபத்தை தாவீது ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். இந்த பதினாறாம் நாளிலே இரண்டு சாமுவேல் புஸ்தகம் ஏழாம் அதிகாரம் பதினெட்டாம் வசனத்திலே, கர்த்தராகிய ஆண்டவரே! தேவரீர்! என்னை இதுவரைக்கும் கொண்டுவந்தததிற்கு நான் எம்மாத்திரம். எம்வீடும் எம்மாத்திரம்.
கர்த்தராகிய ஆண்டவரே! தேவரீர்! என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம். எம்வீடும் எம்மாத்திரம். தாவீதாகிய நான் ஒரு நல்ல அரண்மனையிலே இருக்கிறேன் அலங்காரமான எல்லா வசதிகளும் நிறைந்த அரண்மனையிலே இருக்கிறேன். ஆனால் நான் ஆராதிக்கிற என் தேவன் என்னுடைய உடன்படிக்கை பெட்டி ஒரு கூடாரத்திற்குள்ளாக இருக்கிறது, அவருக்காக நான் ஒரு மகிமையான ஆலயத்தை கட்ட வேண்டும் என்று சொல்லி தாவீது வாஞ்சிக்கிறான். அதை கர்த்தருடைய மணிமண்டபத்திலே சொல்கிறான். இப்பொழுது அந்தி இரவிலே கர்த்தர் தனக்கு தரிசனமாக சொல்லி இந்த தாவீது எனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொல்லி எண்ணினபடியினால், நான் அவனுக்கு ஒரு வீட்டை கட்டுவேன் என்று சொல்லி கர்த்தர் ஒரு பெரிய வாக்குதத்தத்தை கொடுக்கிறார்.
கர்த்தருடைய பிள்ளைகளே! நாம் ஆண்டவருடைய நாமத்தை மகிமைபடுத்த நாம் முன்வருகிறபொழுது கர்த்தருடைய ஊழியத்திற்கு நான் கொடுக்கிறபொழுது கர்த்தர் நம்மை அங்கிகரிக்கிறார். நமக்கு வேண்டிய நன்மைகளை கொடுக்கிறார். ஜீவனுடைய ஆண்டவரை ஆராதிப்பதற்காக மகிமையான காரியங்களை ஆலயங்களை கட்டி எழுப்பி சுவிஷேச பணிகளை செய்து ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுவதற்காக நம்மையும் நம்முடையவைகளையும் நாம் அர்பணிக்கிறபொழுது கர்த்தர் நம்முடைய குடும்பத்தை கட்டுவார். கர்த்தர் நமக்கு பெரிய நீடிய வாழ்வை கொடுப்பார். நம்முடைய எதிர்கால காரியங்களை பொறுப்பேற்று கொள்வார். எல்லா நன்மைகளாலும் நம்மை திருப்திபடுத்துவார். அந்த வல்லமையுள்ள ஆண்டவர் நமக்கு பெரிய காரியங்களை செய்வாராக! என் வீடும் நானும் எம்மாத்திரம். தகுதியற்ற எனக்கு இவ்வளவு பெரிய காரியங்களை செய்தீரே! என்று சொல்லி ஆண்டவரை மகிமைபடுத்துகிறான்.
இரக்கமுள்ள ஆண்டவரே! உம்முடைய கிருபை பெரிது. நீர் எங்களுக்கு பெரிய நன்மைகளை செய்கிறீர். நாங்கள் எண்ணுவதற்கும் நாங்கள் வேண்டிகொள்வதற்கும் மேலான நன்மைகளை கொடுக்கிறீர் கர்த்தாவே! வெகுதூரமான காலங்களுக்கு நீடிய வாழ்வின் காலங்களை கொடுத்து எங்களை ஆசிர்வதிக்கிற தேவனாக இருக்கிறீர் அதற்காக உமக்கு ஸ்தோத்திரம்.
இந்த ஜெபத்தை ஏறெடுக்கிற தம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் வேண்டிய நன்மைகளை கொடுத்து ஆசிர்வதிப்பீராக! கிருபையின் கரத்தினாலே தாங்குவீராக! ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்