திடப்படுத்துகிறவர்

இந்த நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே அந்த வேலை நடந்தேறாதபடிக்கு கைசலித்து போகும் என்று சொல்லி அவர்கள் எல்லாரும் எங்களை பயமுறுத்த பார்த்தார்கள்.  ஆதலால் தேவனே! நீர் என் கைகளை திடப்படுத்தி அருளும்.

தேவனே! நீர் என் கைகளை திடப்படுத்தி அருளும். பாபிலோனிலிருந்து ராஜாவினுடைய உத்திரவின்படியாக எரிசலேமுக்கு திரும்பிய நெஹேமியா எரிசலேமின் அதிகாரிகளையும், அதிபதிகளையும், ஆசாரியர்களையும், லேகியர்களையும் ஒருமுகப்படுத்தி அங்கே அலங்கத்தை கட்டி அதை எழுப்பி வருகின்றார்கள். சத்ருக்களாகிய சம்பலாத், தொவியா போன்றதான மக்கள் தந்திரத்தாலும் சூழ்ச்சியினாலும் இந்த காரியங்களை தடுத்து போடுவதற்காக பிரயாசப்படுகின்றார்கள். இன்னுமாக நெஹேமியா இடத்திலே ஆள் அனுப்பி நாம் சமாதானமாகப் பேசிக்கொள்ளலாம்.

ஓனோ என்று சொல்லப்படுகிற பள்ளத்தாக்கிலே போய் தனித்திருந்து நாம் பேசினால் இந்த பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும் என்று சொல்லி தந்திரமாக அந்த காரியத்தை சொல்கின்றார்கள். பேச்சு வார்த்தைக்கென்று சொல்லி சென்றால் ஜனங்கள் எல்லாரும் வேலையை விட்டு ஓய்ந்து இருப்பார்கள். காரியம் தடைபடும். ஜனங்கள் சலித்து போவார்கள். பின்வாங்கி போவார்கள் என்பது எதிராளிகளுடைய திட்டம். கர்த்தருடைய பிள்ளைகளே! நாம் சூழ்ச்சிகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. ஜனங்களை பயமுறுத்தப்பார்க்கின்றார்கள். ராஜாவுக்கு விரோதமாக கலகம் பண்ணுகிறார்கள் என்று சொல்லி ஒரு பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றார்கள்.

நெஹேமியாவே தன்னை ராஜாவாக அபிஷேகம் பண்ணி கொள்வதற்காக அங்கே ஆசாரியர்களை ஆயத்தப்படுத்தி கொண்டான் என்று சொல்கின்றார்கள். இவ்விதமான சதித் திட்டங்கள் வருகின்றபொழுது கர்த்தருடைய ஊழியத்தை செய்கிற அவருடைய பிள்ளைகளாகிய நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எதிராளிகளுடைய சூழ்ச்சிகளை அறிந்து நாம் ஒதுங்கி ஆண்டவருடைய பலத்தை தேடிக் கொள்ள வேண்டும்.

கர்த்தாவே! இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொருவருக்கும் அருள் செய்வீராக! நீர் எங்களுக்கு கற்று கொடுப்பீராக! எதிராளிகளை அடையாளம் காட்டுவீராக! தீய வழிகளுக்கு நாங்கள் விலகி ஜீவித்து நீர் விரும்புகிற பாதையிலே சென்று உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த அருள் செய்வீராக! இந்நாளிலே இந்த ஜெபத்தை தியானித்து கொண்டிருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கு வேண்டிய திட மனத்தையும் தைரியத்தையும் நம்பிக்கையையும் கட்டளையிட்டு அருளுவீராக! உம்முடைய தயையுள்ள கரம் உம்முடைய பிள்ளைகளோடு கூட இருப்பதாக! ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com