தமிழக அரசை கண்டித்து வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்! தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (08.09.2018) சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசைக் கண்டித்து வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

திமுக பொது செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் திரு.துரைமுருகன், துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, மற்றும் திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 10ம் தேதி நடைபெறும் பாரத் பந்த் வெற்றி பெற ஒத்துழைப்பு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், குட்கா ஊழலில் சிக்கிய தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் அமைச்சரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும், காவிரிநீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லவும், நதி நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை, வாக்காளப்பட்டியலை தூய்மை படுத்தும் வழிகளை பின்பற்றுவோம், மற்றும் ஊழலின் உருவமான தமிழக அதிமுக அரசை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த திரு.ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது, “வருகிற 18ம் தேதி தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையிலே, இந்த ஆட்சியினுடைய அலங்கோலங்களையெல்லாம் சுட்டிக்காட்டக்கூடிய வகையிலே, உடனடியாக டிஜிபி ராஜேந்திரனையும், அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கர் அவர்களையும் ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடிய வகையில், ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது, என்ற இந்த தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்”.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com