தமிழகத்திற்கு பிரதமர் வருகை!
திருப்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். திருப்பூரில் தொடங்கப்படவுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும், மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கவும் பிரதமர் மோடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கறுப்புக்கொடி போராட்டம் பல கட்சிகள் அறிவித்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி, திருப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் விழா நடக்கவிருக்கும் இடத்திற்கு செல்கிறார். இங்கு நடக்கவிருக்கும் அரசு விழாவில் தலைமையேற்று பங்கேற்கும் பிரதமர் மோடி, இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவுடன், பாரதிய ஜனதா கட்சி நடத்தும் பொது கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கும் அரசு விழாவில் சென்னையில் வண்ணாரப்பேட்டை – டிம்ஸ்சுக்கும் இடையே மெட்ரோ ரயில் மற்றும் தேஜஸ் ரயில் சேவையையும் தொடங்கி வைக்க இருக்கிறார். அரசு விழா என்ற பெயரில் தேர்தல் பேரணி போல் மக்களிடம் பிரச்சாரம் செய்வதுமட்டுமல்லாமல், மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை அறிவிப்பது தவறு என்று பல அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக மதிமுக கட்சியினர் கறுப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளதையொட்டி திருப்பூரில் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.