டிவி, டிஜிட்டல் கேமரா, சினிமா டிக்கெட் – போன்ற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு!

இருபத்து மூன்று பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28% உயர் ஜி.எஸ்.டி வரி பிரிவிலிருந்து 7 பொருட்கள் 18% வரி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் சினிமா டிக்கெட்டிற்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. 28% உயர் ஜி.எஸ்.டி வரிப்பிரிவில் இருந்த நூறு ரூபாய்க்கு அதிகமான சினிமா டிக்கெட்டுகள் தற்போது 18% வரி பிரிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நூறு ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட் 18% ஜி.எஸ்.டி வரி பிரிவிலிருந்து தற்பொழுது 12% வரி பிரிவிற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

32 இன்ச் டிவி, டிஜிட்டல் கேமரா, கியர் பாக்ஸ் போன்ற பொருட்களுக்கான வரி 28% வரி பிரிவிலிருந்து 18% பிரிவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் 18% வரி விகிதத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெயிட்லி தெரிவித்துள்ளார். பின்னர் அவர் கூறியதாவது, 28% உயர் ஜி.எஸ்.டி வரி பிரிவில் 34 சொகுசு பொருட்கள் மட்டுமே இருப்பதாக கூறினார். இந்த புதிய வரி விகிதங்கள் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com