சென்னை புத்தக கண்காட்சி நாளை (ஜனவரி மாதம் 20ம் தேதி) நிறைவு பெறுகிறது!
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி நந்தனம் YMCA உடற்கல்வி இயல் இசை கல்லூரி மைதானத்தில் தொடங்கிய சென்னை புத்தக கண்காட்சி நாளை (20ம் தேதி) நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டை விட 5 கோடி ரூபாய் அதிகமாக சுமார் 20 கோடி வரை புத்தகங்கள் விற்று மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 17 நாள் புத்தக கண்காட்சிக்கு இதுவரை 13 லட்சத்திற்கும் மேல் மக்கள் வருகை தந்துள்ளனர். மேலும் 72 லட்சம் புத்தகங்கள் விற்பனை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் 810 அரங்குகள் அமைக்கப்பட்டு சுமார் ஒன்றரை கோடி புத்தகங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிறுவர்களுக்கான நூல்கள், சமையல், மற்றும் வரலாற்று நூல்கள் மிக அதிக அளவில் விற்பனை அடைந்துள்ளதாக பதிப்பாளர்கள் தெரிவித்தனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த புத்தக கண்காட்சியில் ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருக்குறள் சிறப்பு போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டதில் மாணவர்கள் மிக உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த ஆண்டின் புத்தக கண்காட்சி நாளை மாலை ஆறு மணி அளவில் மரியாதைக்குரிய மாண்புமிகு நீதியரசர் திரு.ஆர்.மகாதேவன் (சென்னை உயர்நீதிமன்றம்) அவர்கள் விழா நிறைவு பேருரை அளிக்க நிறைவு பெறுகிறது.