சுதந்திரம்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் இருபத்தியெட்டு ஒன்பதாவது வசனத்திலே, தேவரீர்! உமது ஜனத்தை இரட்சித்து உமது சுதந்திரத்தை ஆசிர்வதியும். அவர்களை பூஷித்து அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தி அருளும். சங்கீதக்காரனாகிய தாவீது ஆண்டவருடைய சமூகத்திலே மன்றாடுகிறதை பார்க்கிறோம். உமது ஜனத்தை இரட்சித்து உம்முடைய நாமத்தை தரித்திருக்கிற உம்முடைய பிள்ளைகளை இரட்சித்து கொள்வீராக. உமக்கு பயப்படுகிற மக்களை நீர் ஆசிர்வதிப்பீராக.
உமக்கென்று நீர் பேர் சொல்லி அழைத்த உம்முடைய பிள்ளைகளுக்கு உம்முடைய ஆசிர்வாதங்களை கொடுத்து அவர்களை போஷித்து அவர்களை உயர்த்துவீராக. ஜனத்தின் மத்தியிலே சமுதாயத்தின் மத்தியிலே தேசத்திலே நீர் அவர்களை ஆசிர்வதிப்பீராக. அவர்கள் உம்முடைய சுதந்திரம். கர்த்தாவே! உமக்கு பயந்து வாழ்கிறார்கள். உம்முடைய கிருபைக்காக காத்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் உமக்கு மகிமை செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள் கர்த்தாவே! ஆகவே நீர் தெரிந்து கொண்ட உம்முடைய ஜனத்தையும் உம்மை தெய்வமாக தெரிந்து கொண்ட உம்முடைய பிள்ளைகளையும் நீர் ஆசிர்வதிப்பீராக.
கர்த்தர் நன்மையானதை தருவார். தேசமும் தன் பலனைத் தருமென்று வேதத்திலே வாசிக்கிறோம். ஆகவே உம்முடைய பிள்ளைகளுக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் கொடுத்து அவர்களை நீர் சிறந்திருக்கப் பண்ணுவீராக, உயர்ந்திருக்கப் பண்ணுவீராக. ஜாதி ஜனங்கள் மத்தியிலே அவர்களை நீர் மேன்மைப்படுத்தி காத்துக்கொள்வீராக. இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் மன்றாடுகிறோம். உம்முடைய இரக்கத்திற்காக, கிருபைக்காக நாங்கள் மன்றாடி ஜெபிக்கிறோம். நீர் எங்களோடு கூட இருப்பீராக.
உம்முடைய பிள்ளைகளாகிய எங்களை நீர் மறந்து போகாதிரும். உம்முடைய இரட்சண்யத்தை உம்முடைய சந்தோஷத்தை சமாதானத்தை எங்களுக்கு தந்தருளும். இந்த ஜெபத்தை தியானிக்கிற தம்முடைய பிள்ளைகளுக்கு வேண்டிய மேன்மையான காரியங்களை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவீராக. உன் துக்க நாட்கள் முடிந்து போகும் என்று சொன்ன தேவன் எங்களுக்கு போதுமானவராக இருப்பீராக. பெரிய காரியங்களை செய்யும் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்