சிலுவையின் வார்த்தை 06:04 | முடிந்தது.
4. மரணத்தை நமக்கு ஜெயமாக முடித்துக் கொடுத்தார்.
கொரிந்தியர் 15: 53-57 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்.
வ.54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளும்போது மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டதென்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
வ.55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயமெங்கே?
வ.56 மரணத்தின் கூர் பாவம். பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
வ.57 நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ஆதியாகமம் 3:17 ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
தேவனாகிய கர்த்தர் ஆதாமைப் பூமியின் மண்ணினாலே படைத்தார். ஆதாமுக்கென்று ஏதேன் தோட்டத்தை உருவாக்கி அதைப் பண்ணப்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதாமுக்குத் துணையாக ஏவாளை அவனுடைய விலா எலும்பிலிருந்தே உருவாக்கினார். அவர்களுக்கென்று ஏதேன் தோட்டத்தில் கனி தரும் விருட்சங்களை உண்டாக்கி அவைகளைப் புசிக்கலாம். ஆனால் தோட்டத்தின் நடுவில் இருக்கிற நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கும் நாளிலே சாகவே சாவீர்கள் என்று ஒரு கட்டளையைக் கொடுத்திருந்தார். அந்தக் கட்டளையை ஏவாளும் ஆதாமும் மீறினார்கள். அதுவே பாவமாயிற்று. பாவத்தின் சம்பளம் மரணம். இந்த மரணம் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கும் ஏற்பட்டு ஆவி, ஆத்துமா, சரீரத்திலே மரணத்தை உண்டாக்கிற்று. எனவே நம்முடைய சரீரம் அழிவுள்ளதாயும் சாவுக்குரியதாகவும் இருக்கிறது. இந்த அழிவிலிருந்தும் சாவிலிருந்தும் நம்மை மீட்டெடுப்பதற்காக தேவனாகிய பிதா, குமாரனாகிய கிறிஸ்துவை இந்த பூமிக்கு அனுப்பினார்.
கிறிஸ்து நமக்காக பாவமானார். நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்து நம்முடைய ஆத்தும மரணத்திலிருந்து நமக்கு மீட்பைக் கொடுத்தார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே ஆத்தும சாவிலிருந்து நமக்கு ஜெயம் கிடைத்தது. மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்து அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு புது வாழ்வை கொடுத்திருக்கிறார். இந்த ஆசீர்வாதங்களையெல்லாம் இயேசு சிலுவையிலே நமக்கு முடித்துக் கொடுத்திருக்கிறார்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை, via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.