சிலுவையின் வார்த்தை 06:03 | முடிந்தது.
3. நித்திய ஜீவ வாழ்வை நமக்கு முடித்துக் கொடுத்தார்.
யோவான் 3:14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும்,
வ.15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும்.
யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.
யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை. தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.
எகிப்திலிருந்து மோசேயின் தலைமையில் இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குப் புறப்பட்டு வந்தார்கள். வழியிலே ஜனங்கள் “இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை, இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்” எண்ணாகமம் 21:5,6.
ஜனங்கள் மோசேக்கும் கர்த்தருக்கும் விரோதமாக முறுமுறுத்ததினால் கோபம் கொண்ட கர்த்தர் ஜனங்களுக்குள்ளே கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை அனுப்பினார். சர்ப்பங்கள் கடித்ததினால் அநேகர் செத்தார்கள். மோசே கர்த்தரை நோக்கி ஜெபித்தான். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் வெண்கலத்தினால் ஒரு சர்ப்பத்தை செய்து ஒரு கம்பத்திலே தூக்கி வைக்கச் சொன்னார். அதை நோக்கிப் பார்த்தவர்கள் அனைவரும் சாவிலிருந்து மீட்கப்பட்டார்கள்.
கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட … கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப் பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார். எனக்காக சிலுவையில் அறையப்பட்டார் என்றும், எனக்காக ஜீவனை விட்டார் என்றும் விசுவாசிக்கிறவனுக்கு நித்தியா ஜீவனை இயேசு கொடுக்கிறார்.
யோவான் 10:28 நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை.
யோவான் 6:54 என் மாம்சத்தை புசித்து, என் ரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்.
இயேசு கிறிஸ்துவாகிய ஆண்டவர் அவருடைய வார்த்தைகளால் நம்மைப் போதித்தும், அவர் தம்முடைய நீதியின் வழிகளில் நடத்தியும் வருகிறார். தம்மைப் பின்பற்றி வாழ்கிறவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். இதனால் மனிதனும் அவனுடைய ஆத்துமாவும் செத்து கெட்டுப் போவதில்லை. மேலும் கிறிஸ்துவின் சத்திய போதனைகளின்படி நடக்கிறவன் கிறிஸ்துவின் கரத்தில் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டவனாயிருக்கிறான். இயேசுவின் கரத்திலிருக்கும் பரிசுத்தவானை – நித்திய ஜீவனைப் பெற்றவர்களை யாரும் பறித்துச் செல்ல முடியாது.
மேலும் இயேசுக் கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசித்து, அவருடைய ரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு அவர் நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். இவர்கள் இவ்வுலகில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டிருந்தாலும் அவர்களைக் கடைசி நாளிலே நித்திய ஜீவ வாழ்வுக்காக உயிரோடு எழுப்புவேன் என்று இயேசு நமக்கு உறுதி அளித்திருக்கிறார்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Geralt [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.