சிலுவையின் வார்த்தை 05:01 | தாகமாயிருக்கிறேன்.
யோவான் 19:28 வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன்.
இயேசு தாம் சிலுவையில் சொன்ன 5ம் வார்த்தை தாகமாயிருக்கிறேன். வியாழன் இரவில் இயேசு தம்முடைய சீஷர்களோடு எருசலேமின் மேல் வீட்டில் பஸ்காவை ஆசாரித்தார். அதன் பின்னர் தம்முடைய சீஷர்களோடு கெத்செமனே தோட்டத்திற்கு ஜெபிக்கச் சென்றார்.
அவர் பாரப்பட்டு ஜெபித்து பிதா அருளிய பெலத்தைப் பெற்றார். ஜெபத்தினால் பிதாவோடு தமக்கு இருந்த உறவைப் புதுப்பித்துக் கொண்டார். இனி தாம் செய்யப்போகிற ஊழியத்திற்கான நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டார். அந்த வேளையில்தான் யூதாஸ் யேசுவைக் காட்டிக் கொடுக்க வந்தான். பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பர்களும் அனுப்பினவர்கள் யூதாஸைப் பின் சென்றார்கள். அவன் ரபீ நீர் வாழ்க என்று முத்தமிட்ட யேசுவைப் பிடித்தார்கள். அந்த நேரம் முதல் இயேசு பல அடிபட்டார். அவரைக் காயப்படுத்தினார்கள். வாரினால் அடித்தார்கள். இயேசுவின் சரீரத்தில் ஏற்பட்ட காயங்களிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவருடைய தாகத்தைத் தீர்க்க எந்த பானமும் அவருக்கு கொடுக்கப்படவில்லை.
இரவு முழுவதும் இயேசுவை பல பாடுகளுக்கு உட்படுத்தினார்கள். கேள்விகள் கேட்டும் பரிகாசங்கள் செய்தும் அவரை வேதனைப்படுத்திக்கொண்டே வந்தார்கள். அன்னா, காய்பாவின் அரண்மனைக்கும் பிலாத்துவின் அரண்மனைக்கும், ஏரோதுவின் அரண்மனைக்கும் இயேசுவை அடித்து, இழுத்துக்கொண்டு போனார்கள். இந்த சமயத்திலெல்லாம் இயேசு தாகமாயிருக்கிறேன் என்று சொல்லவில்லை. ஆனால் இயேசு கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் நான்காவது வார்த்தையாக தகமாயிருக்கிறேன் என்றார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்: ஏசுவுக்கு சரீர தாகம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சரீர தாகம் எடுத்து சிலுவையில் அறையப்பட்டவர்கள் தண்ணீர் வேண்டும் என்று நா வறண்டு கேட்கிறபொழுது கசப்புக் கலந்த காடியைக் கொடுப்பார்கள். அது அவர்களுடைய தாகத்தை ஓரளவு தீர்க்கும். காயங்களால் ஏற்பட்ட வேதனைகளையும் மறக்க உதவும். ஆனால் யேசுவோ அவருக்கு கொடுத்த கசப்புக் கலந்த காடியைக் குடித்து தன் தாகத்தை தீர்த்துக் கொள்ளவும் இல்லை. வேதனையை மறப்பதற்காக அந்த காடியை குடிக்கவும் இல்லை. எனவே இயேசு சிலுவையில் தாகமாயிருக்கிறேன் என்பது அவருடைய ஆத்மீக தாகத்தையே குறிக்கிறது. இதை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஏசுவுக்கு ஆத்மீக தாகம் ஏற்பட்டதற்கான காரணங்களை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By WeAppU [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.