சர்வதேச நாணய நிதிய தலைமை பொருளாதார அதிகாரியாக கீதா கோபினத் நியமிக்கப்பட்டுள்ளார்!
சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பொருளாதார தலைமை அதிகாரியாக இந்திய வம்சாவளியான திருமதி.கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பொருளாதார தலைமை அதிகாரியாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.
அமெரிக்க வாழ் இந்தியரான இவர், இந்தியாவில் கொல்கத்தா நகரத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மைசூருவில் பள்ளிப்படிப்பை முடித்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் 1992ம் ஆண்டு இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார். பின்னர், 1994ம் ஆண்டில் டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்-இல் முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மற்றும் ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பை பூர்த்திசெய்துள்ள அவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தற்போது பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
அந்நிய செலாவணி, மேக்ரோ பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி கொள்கை தொடர்பில் நிபுணத்துவம் உள்ள இவருக்கு, வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் பூகோளமயமாதல் தொடர்பில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் டிசம்பர் 2017ம் ஆண்டில் மும்பை எக்ஸிம் வங்கியின் துவக்க நாள் விரிவுரையை வழங்குவதற்காக இந்தியவிற்கு வந்தபொழுது, “எனக்கு தெரிந்த எந்த ஒரு மேக்ரோ பொருளாதார நிபுணரும் இந்தியாவின் டீமானிடைசேஷன் (பணத்தின் மதிப்பைக் குறைத்தல்) முயற்சியை ஒரு நல்ல யோசனையாக கருதவில்லை. இதற்கு பதிலாக, இந்த காலகட்டத்தை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிமுறைகளை மேலும் சீர்படுத்த பயன்படுத்தி இருக்கலாம்”, என்று கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.