கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்பு! இதுவரை 40 பேர் உயிரிழப்பு!
கஜா புயல் ஓய்ந்து இரண்டு நாட்கள் ஆன பின்பும் டெல்டா மாவட்டத்திலுள்ள மக்கள் குடிநீர், உணவு மற்றும் இருக்க இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது டெல்டா மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மின்சாரம் இல்லாமல், சாலை போக்குவரத்து இணைப்பில்லாமல் தனித்தீவுகள் போல காட்சி அளிக்கின்றன.
நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தொடங்கி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக சென்ற கஜா புயல், இந்த மாவட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மற்றும் உடைமைகளுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்த மாவட்டங்களிலுள்ள கிராமத்து மக்கள் இதுவரை எந்த அதிகாரிகளும் அவர்களுக்கு உதவ வரவில்லை என்று கூறுகின்றனர். எல்லா உதவிகளும் தயார் நிலையில் உள்ளது, மீட்பு குழு தயார் நிலையில் இருக்கிறது என்ற கூறும் அதிகாரிகள் இதுவரை இங்கு வரவில்லை என்று கூறுகின்றனர். மருத்துவ உதவி, உணவு மற்றும் கால்நடைகளுக்கு உதவி வரை உங்களுக்கு தயார் நிலையில் உள்ளது என்று அதிகாரிகள் கூறினாலும் இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
இந்த புயலால் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை மரசாகுபடிக்கு சுமார் 15 ஆண்டுகள் ஆகும் என்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மரங்களுக்கு நஷ்டஈடு கேட்டு அரசிற்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கஜா புயல் பாதிப்பால் இதுவரை மொத்தம் 40 பேர் இறந்துள்ளதாக பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 1 லட்சத்திற்கும் மேலான மரங்கள், 9 துணை மின்நிலையங்கள், 597 ட்ரான்ஸ்பார்மர்கள் (மின்மாற்றிகள்), 243 பாலங்கள், சுமார் 191 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Image Credit: India Meteorological Department