இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 1970களில் இருந்ததைவிட மிகவும் அதிகரித்துள்ளது!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 6.1% – ஆக அதிகரித்துள்ளது. இந்த சதவிகிதம் 1972-73களில் இருந்ததை விட அதிகமாகும்.

2004-05ம் ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் வேலையின்மை விகிதம் 8.3%ஆக இருந்தது. இந்த நிலையை மேம்படுத்த பல பொது வேலைவாய்ப்பு கொள்கைகள் அன்றைய மத்திய அரசால் அமல் படுத்தப்பட்டது. இதையடுத்து வேலையின்மை விகிதம் 2009-10-ல் 6.6% ஆக குறைந்தது. இது குறித்து அன்றைய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே கூறியபோது ‘உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், இந்திய அரசு, நம் நாட்டின் வேலைவாய்ப்பு தரத்தை பராமரித்ததுமட்டுமல்லாமல், வேலையின்மை சதவிகிதத்தை வெகுவாக குறைத்துள்ளது. இது மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு பொருளாதார ஊக்க நடவடிக்கைகள் மற்றும் பொது வேலைவாய்ப்பு கொள்கைகளின் வெற்றி’ என்றார்.

சுதந்திர இந்தியாவில் வேலையின்மை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்துவந்த நிலையில், வேலையின்மை விகிதம் அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை சமுதாயத்தில் ஆழ்ந்த வேரூன்றி உள்ளது. வேலையின்மை ஒரு சமூக பிரச்சனையாக கையாளப்படவில்லை என்றால், இதற்கு தீர்வு எதுவும் இல்லை. இந்த சமூக பிரச்சனையை தீர்க்க ஐந்து ஆண்டு திட்டக்கொள்கைகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

2017-18ம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் எந்தவித பலனும் இல்லை என தெரிவித்தது. இந்த அறிக்கையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 99.3% பணம் மீண்டும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருந்தார். இதற்கிடையில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்து அரசை நம்பிக்கொண்டிராமல் பகோடா விற்று சிறு தொழில் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் கூறியது நினைவிருக்கலாம். இந்நிலையில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பது மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது ஒரு மறுக்கமுடியா உண்மையென்றால் மிகையாகாது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com