ஆலயப்பணி
இந்த நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் பதிமூன்றாம் அதிகாரம் முப்பதாம், முப்பத்தி ஒன்றாம் வசனங்களிலே இவ்விதமாக பார்க்கின்றோம். ஆசாரியரையும், லேவியரையும் சுத்திகரித்து அவரவர்களை அவரவர் வேலைகளின் முடைமைகளில் நிரப்பி குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்பட வேண்டிய விறகு காணிக்கையையும் முதல் பலன்களை குறித்து திட்டம் பண்ணினேன்.
என் தேவனே! எனக்கு நன்மை உண்டாக நினைத்தருளும். பாபிலோனில் இருந்து எரிசலேமுக்கு நேராக வந்து மண்மேடுகளாக இருந்த இடங்களை சரிசெய்யவும், அலங்கத்தை கட்டி எழுப்பவும், வாசல்களை கட்டி எழுப்பி அதை புதுப்பித்து அதற்கு பூட்டு தாழ்ப்பாள்களை போட்டு உறுதிபடுத்துகிற பணிகள் எல்லாவற்றையும் செய்து முடித்தான். கர்த்தருடைய கரம் நெஹேமியாவின் கூட இருந்தது. அதன் பின்னர் ஆலயப் பணிகளிலே அங்கே இருந்த லேவியர்கள், ஆசாரியர்களை ஈடுபடுத்த நெஹேமியா முயற்சி செய்கிறான். எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்துகிறான். அவரவர்க்கு உரிய வேலைகளை திட்டம் பண்ணி அந்தந்த நாட்களில் அந்தந்த நேரங்களில் அந்தந்த ஆராதனைக்குரிய கதைகள் நடை பெறுவதற்காக எல்லாவற்றையும் ஒழுங்கு செய்கிறதை நாம் பார்க்கிறோம்.
தகனப்பலிகளுக்கென்று விறகுகளை காணிக்கையாக கொண்டு வந்து சேர்ப்பதற்காக மக்களை உற்சாகப்படுத்த வேண்டும், விளைச்சலிலே முதல் பலன்களை, கையறுநிலையிலே முதல் பலன்களை கொண்டுவந்து ஆண்டவருக்கு படைத்து பலி செலுத்தி ஆண்டவரை மகிமைப்படுத்த ஜனங்களை உற்சாகப்படுத்த வேண்டும். இந்த காரியங்கள் எல்லாவற்றையும் செய்வதற்கு நெஹேமியா ஆலோசனைக்காரனாக இருக்கிறான். அதை திட்டம் பண்ணுகிறவனாக இருக்கிறான். ஆலயத்தை கட்டுவது நல்லது ஆலயம் ஒரு அலங்காரப் பொருள் அல்ல, பார்த்து மகிழ்வதற்காக அல்ல ஆலயத்திலே கூடி வந்து ஆண்டவருக்கு மகிமை செலுத்தி அவரை ஸ்த்தோத்திரித்து அவரை புகழ்ந்து பாட வேண்டும். ஆத்மாக்களை ஆதாயம் பண்ண வேண்டும். மிக உற்சாகப்படுத்தி கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதுதான் முக்கியமான பணி.
கர்த்தாவே! இந்த பணிகளை செய்த நெஹேமியாவின் ஜெபத்தை கேட்பீராக! அதேபோன்று உம்முடைய நாம மகிமைக்காக உம்முடைய பணிகளை செய்து வரக்கூடிய கர்த்தருடைய பிள்ளைகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீர் உதவி செய்வீராக! அந்த பிள்ளைகளை திடப்படுத்துவீராக! அவருடைய திட்டங்களையும் தீர்மானங்களையும் நிறைவேற்றுவீராக! நன்மையான காரியங்களை நடத்தி அவர்களை சந்தோஷப்படுத்துவீராக! இந்நாளிலே இந்த ஜெப தியானத்தை ஏறெடுக்கிற ஒவ்வொரு பிள்ளைகளையும் நீர் ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்தும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்