அத்தி மரம்
இன்றைய நாளில் ஏசுவின் வார்த்தைகளை தியானிக்கப் போகிறோம். மார்க் எழுதின சுவிஷேஷம் பதினேழாம் அதிகாரம் பதினான்காம் வசனத்தில், இது முதல் ஒருகாலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியை புசியாதிருக்கக்கடவன். எரிசலேமுக்கு நேராக வந்துகொண்டிருக்கிற ஏசு பசியோடுகூட காணப்படுகிறார். அவர் கண்ணேறிட்டு பார்க்கிற பொழுது செழிப்பான தோற்றத்திலே பச்சை பசேல் என்று இருக்கக்கூடிய அந்த அத்தி மரத்தை பார்த்து அவர் சந்தோஷத்தோடுகூட சொல்கிறார். இந்த செழிப்பான மரத்திலே தன்னுடைய பசியை ஆற்றகூடிய நல்ல பழங்கள் கிடைக்குமென்று அவர் எதிர்பார்த்து போகிறார். அருகாமையிலே சென்று பார்க்கிறபொழுதுதான் அந்த மரத்திலே ஒரு காயோ, கனியோ இல்லை. அது அவருக்கு ஒரு பெரிய மனவேதனையை கொடுத்துவிட்டது. இனி எவ்வளவு காலம் காத்திருப்பது? பசியை ஆற்றுவதற்கு ஒரு பழம் இல்லையே! ஆகவே அவர் சொல்கிறார் இது முதல் ஒருகாலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியை புசியாதிருக்கக்கடவன்.
அண்ட சராசரித்தையும் படைத்த தேவாதி தேவனுக்கே ஒரு பழத்தை கொடுக்க இந்த மரத்தால் முடியவில்லை. இந்த மரம் இனி யாருக்கும் பயன் கிடைக்க போறதில்லை. இந்த மரத்துக்கு சொந்தகாரனுக்கோ அல்லது இந்த தோட்டத்துகாரனுக்கோ எந்த பலனும் கிடைக்கப்போறதில்லை. ஆகவே இதிலிருந்து இனி புறப்படாது இருப்பதாக என்கிற அர்த்தத்திலே ஆண்டவர் இந்த வார்த்தைகளை சொல்கிறார்.
கர்த்தருடைய பிள்ளைகளே! உங்களிடத்திலே என்னிடத்திலே நல்ல கனிகளை ஆண்டவர் எதிர்பார்க்கிறார். நற்கிரியைகளை எதிர்பார்க்கிறார். அவருடைய பசியை ஆற்றுவோம். அவருடைய தாகத்தை தீர்ப்போம். அவரை சந்தோஷப்படுத்துவோம். இரக்கமுள்ள ஆண்டவரே! எங்களை தாழ்த்துகிறோம். மண்ணோடுகளுக்கு ஒத்த எங்களை தாழ்த்தி ஒப்படைக்கிறோம். உம்முடைய கிருபையின் கரம் எங்களை தாங்கட்டும். என்னிலே எங்களிலே நல்ல கனியை நீர் கொடுக்க செய்வீராக.
உம்முடைய பசியை ஆற்ற கூடிய நற்கிரியைகளை என்னிலே எங்களிலே இருந்து வெளிப்பட பண்ணுவீராக. தடையான காரியங்களை அகற்றிபோடுவீராக. உம்மை நோக்கி மன்றாடி வேண்டி கொள்கிற ஒவ்வொருவருடைய ஜெபத்தை கேட்டு அற்புதங்களை செய்து அடையாளங்களை செய்து அவர்களை ஆசிர்வதிப்பீராக. கிருபையின் கரத்தினால் தாங்கும். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்