மலேசிய புரட்சி தலைவர் டாக்டர் மகாதீர் | ஒரு சகாப்தம்!
பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்கு பின் மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 92 வயதான டாக்டர் மகாதீர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று 22 ஆண்டுகளான பின்னர் மறுபடியும் மலேசியாவின் புதிய பிரதமராகி இருக்கிறார்.
மலேஷியா ஜனநாயக நாடு என்றாலும், சுதந்திரம் பெற்ற 1957ம் ஆண்டிலிருந்து 13 பொது தேர்தல்கள் நடந்தும், பாரிசான் நேஷனல் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக ஆட்சியை தன்வசம் வைத்திருந்தது. இதில் அம்னோ கட்சி முக்கிய அங்கமாகும். இந்த கூட்டணி காட்சிகளின் தலைவராக டாக்டர் மகாதீர் 1981ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மலேசியாவின் முதல்வராக பணியாற்றியுள்ளார்.
இவர் 2003ம் ஆண்டு தனது 78ம் வயதில் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் போது, அம்னோ கட்சியை அம்னோ மட்டுமே தோற்கடிக்க முடியும் என உட்கட்சி பிரச்சனைகளை பற்றி கூறினார். அவர் கூறியபடியே, 2003ம் ஆண்டு முதல் மலேசியாவில் உட்கட்சி மற்றும் உள்நாட்டு குழப்பங்களுக்கு பஞ்சமில்லை. இதற்கு மேல், பின் வந்த மலேஷிய பிரதமர் மீது பல பில்லியன் டாலர் அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் வர, டாக்டர் மகாதீர் 2016ம் ஆண்டு தனது 90ம் வயதில் மறுபடியும் அரசியலில் இறங்கினார். இம்முறை அம்னோ கட்சிக்கு எதிராக. சில நாட்களுக்கு முன் நடந்த 14ம் ஆண்டு பொது தேர்தலில் முதன் முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் 2016ம் ஆண்டிலிருந்து டாக்டர் மகாதீர் கையெடுத்து நடத்திய தொடர் போராட்டம் என்றே கூறவேண்டும்.
இவர் தனது சொந்த மண் ஊழலினால் அழிவதை பார்க்க முடியாமல் அரசியலுக்கு மறுபடியும் இறங்கியது மக்களிடையே இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. மலேசிய மக்கள் அனைவரும் டாக்டர் மகாதீருக்கு ஆதரவாக அணி திரண்ட விதத்தை பார்த்த பார்வையாளர்கள் இது ஒரு மலேசிய சுனாமி என்று வர்ணித்துள்ளனர்.