‘பீரியட்: எண்டு ஆப் சென்டென்ஸ்’ குறும்படம் ஆஸ்கார் விருதை வென்றது!
தமிழகத்தை சேர்ந்த திரு.அருணாச்சலம் முருகானந்தத்தின் மலிவு விலை நாப்கின் தயாரிப்பை அடிப்படையாக கொண்ட ‘பீரியட்: எண்டு ஆப் சென்டென்ஸ்’ என்ற குறும்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. சிறிய டாக்குமெண்டரி குறும்பட பிரிவில் பல்வேறு நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட குறும்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் பங்கேற்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த திரு.அருணாச்சலம் முருகானந்தம் பெண்களுக்காக குறைந்த விலையில் நாப்கின் தயாரித்ததை பற்றி எடுக்கப்பட்ட குறும்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த டாக்குமெண்டரி குறும்படத்தை ஈரானிய அமெரிக்க பெண் இயக்குனரான ‘ராய்கா ஸிட்டாப்சி’ இயக்கியுள்ளார். இந்த படம் பெண்களின் மாதவிடாய் குறித்த தவறான மற்றும் பிற்போக்கான எண்ணங்களை விவரிக்கும் படைப்பாகும். பெண்களுக்கெதிரான பிற்போக்கு எண்ணங்கள், பெண்களின் படிப்பு, வளர்ச்சி, தனிமனித சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை பாதித்துள்ளது என்று இந்த குறும்படம் மிக தெளிவாக சித்தரித்துள்ளது. இந்த விருதை பெரும் பொழுது அவர், ‘மாதவிடாய் பற்றிய ஒரு படம் ஆஸ்கார் விருதை வென்றதை என்னால் நம்பமுடியவில்லை’ என்று கூறினார்.